சென்னை பெண் இன்ஜினீயரை கொலை செய்தது எப்படி என்று, கைது செய்யப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்தில் காவல் துறையினருக்கு செய்துகாட்டினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி கடந்த 13-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
சிப்காட் வளாகத்துக்குள்ளேயே அவரது உடல் 22-ம் தேதி மீட்கப்பட்டது. கொலை செய்ததாக மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் உத்தம் மண்டல், ராம் மண்டல் 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
உஜ்ஜல் மண்டல் என்பவர் கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றார். விமானத்தில் போலீஸார் கொல்கத்தாவுக்கு சென்று அவரை 26-ம் தேதி கைது செய்தனர். 3 பேரையும் 4-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, கொலை நடந்த சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு 3 பேரையும் சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை அழைத்து வந்தனர். உமா மகேஸ்வரியை எப்படி கொலை செய்தார்கள் என்று செய்துகாட்டும்படி காவல் துறை அதிகாரிகள் கூற, உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகிய 3 பேரும் செய்துகாட்டினர்.
சிப்காட் வளாகத்தில் 3 பேரும் கட்டுமான வேலை செய்த இடம், அதன் அருகில் அமர்ந்து மது அருந்திய இடம், டிசிஎஸ் அலுவலகத்தில் இருந்து நடந்து வந்த உமா மகேஸ்வரியை தூரத்தில் இருந்து பார்த்த இடம், அவரிடம் முதலில் தகராறு செய்த இடம், பின்னர் தப்பி ஓடிய உமா மகேஸ்வரியை தூக்கிச் சென்ற இடம், அவரது கை, கால்களை யார் யார் பிடித்துக்கொண்டனர் என்ற விவரம், அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இருட்டான புதர் மறைவில் பிடித்து வைத்த இடம் மற்றும் பிற சம்பவங்களையும் நடித்துக் காட்டினர். அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற ஏடிஎம் மையம், அந்த கார்டை எரித்த இடம் ஆகியவற்றையும் போலீசாருக்கு காட்டினர்.
கொல்கத்தாவில் பிடிபட்ட உஜ்ஜல் மண்டல்தான் உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தியவர். தன் பாக்கெட்டில் இருந்து கத்தியை எடுத்து உமா மகேஸ்வரியின் வயிற்றில் 3 முறை, கழுத்தில் ஒரு முறையும் குத்தியதை செய்துகாட்டினார்.
எப்போதுமே பேன்ட் பாக்கெட்டில் கத்தி வைத்திருக்கும் பழக்கம் உண்டு என்று போலீஸாரிடம் அவர் கூறினார். கத்தி வாங்கிய கடையையும் போலீஸாருக்கு காட்டினார். அந்த கடைக்காரரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
3 பேரும் செய்துகாட்டியது அனைத்தையும் போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர். குற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களையும் அவர்கள் மூலமாகவே சேகரித்தனர். சுமார் 3 மணி நேரம் சிப்காட் வளாகத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் 'லைவ் ரிப்போர்ட்' போல போலீஸார் தயாரித்துள்ளனர்.