தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் கோவை; ஆண்டுக்கு ரூ.200 கோடி கிடைக்கும்- மாநகராட்சி ஆணையர் தகவல்

ம.சரவணன்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் முதல் கட்டப் பட்டியலில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி கிடைக்கும் என மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

நாட்டில் 100 'ஸ்மார்ட்' நகரங்கள் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்தார்.

>முதல் கட்டமாக 20 நகரங்களைத் தேர்வு செய்து அவற்றுக்கு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

இதன்படி, தேர்வு செய்யப்பட்ட 100 நகரங்களின் நிர்வாகங்களிடம் இருந்து எவ்வாறு நிதியை சிறப்பாக பயன்படுத்துவது குறித்த கருத்துகளை மத்திய அரசு கேட்டது. இதையடுத்து, அந்தந்த நகரங்கள் சார்பில் பொதுமக்கள், தொழில்முனைவோர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கடந்த டிசம்பர் மாதம் வரை கருத்து கேட்கும் பணி நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட கருத்துகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட கருத்துகள் குறித்து பரிசீலனை செய்த மத்திய அரசு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் முதல் 20 நகரங்கள் குறித்த முதல் கட்டப் பட்டியலை நேற்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். 20 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் 5 தலைநகரங்கள் உட்பட பல்வேறு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நகரமான கோவை, முதல் கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது இங்குள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள தொழில்முனைவோர் பலத்த வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் கூறும்போது, "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதல் கட்டத்திலேயே கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த 5 ஆண்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.200 கோடி வீதம் மொத்தம் ரூ.1000 கோடி அளவுக்கு, இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு நிதி கிடைக்கும்.

ஏற்கெனவே, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன. இதன்படி, இங்குள்ள 8 குளங்களின் ஆக்கிரமிப் புகளை அகற்றி அவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் நீர்வழிப்பாதை அமைக்க உள்ளோம். ஒவ்வொரு குளத்தைச் சுற்றிலும் சுற்றுவட்டப்பாதை, சைக்கிள் பாதை, பூங்கா அமைக்க உள்ளோம். மேலும், மாநகரம் முழுவதும் பல்வேறு பலன் தரக்கூடிய சோலார் மின்கம்பங்கள் அமைக்க உள்ளோம். அதில், வைஃபை வசதி, சிசிடிவி கேமரா, சோலார் தகடுகள், மின்விளக்கு ஆகியவை அமைக்கப்பட உள்ளன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை எடுத்துச் செல்வது குறித்து விரிவாக விவாதிக்க சென்னையில் நாளை (இன்று) கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில், கலந்து கொள்ள இருக்கிறேன்.

கூட்டத்துக்கு பின்னர் திட்டம் குறித்து இன்னும் கூடுதல் செயல்வடிவம் தெரிவிக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT