தமிழகம்

பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு திட்டம் தொடங்கியது: ரேஷன் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என முதல்வர் உறுதி

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் பழைய குடும்ப அட்டைக்குப் பதிலாக மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் ரேஷன் கார்டு) வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். பொது விநியோகத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பழைய குடும்ப அட்டைக்குப் பதி லாக மின்னணு குடும்ப அட்டை வழங் கும் திட்டத்தை சென்னை கொரட்டூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். 7 பயனாளி களுக்கு மின்னணு குடும்ப அட்டையை நேரில் வழங்கிய முதல்வர், பின்னர் காணொலிக் காட்சி மூலம் சிந்தாமணி கூட்டுறவு கடையில் மின்னணு குடும்ப அட்டை மூலம் பொருட்கள் வழங் கும் பணியையும் தொடங்கிவைத் தார்.

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் விலையில்லா அரிசி வழங்கப் படுகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர், கீழ் உள்ளோர் என்ற பாகுபாடின்றி, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அதன்மூலம் ஏழைகளின் பசியைப் போக்கியதுடன், அவர்களது உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்தார். அவரது வழியில் செயல்படும் இந்த அரசு, பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என தனி மனித உணவு உரிமைக்காக குரல் கொடுத்தவர் பாரதியார். இதை உணர்ந்த எம்ஜிஆரும், ஜெயலலிதா வும் தங்கள் ஆட்சியில் அடித்தட்டு மக்கள், கூலித் தொழிலாளர்கள், விவ சாயிகளை மகிழ்விக்கும் திட்டங் களையே செயல்படுத்தினர். எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டமும், ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகமும் வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினரையும் வியக்க வைக்கின்றன.

வீடுதோறும் இலவச அரிசி, ரம்ஜா னுக்கு நோன்புக்கஞ்சி அரிசி, கோயில் களில் அன்னதானத் திட்டத்துக்கு அரிசி என மக்களின் பசியைப் போக்கி னார் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்படும் இந்த அரசு அன்ன தானத் திட்டங்களை மேலும் செம்மைப் படுத்தும் என உறுதி அளிக்கிறேன். உணவுத் துறைக்கு ஆண்டுதோறும் ரூ.5,500 கோடி மானியம் வழங்கும் மாநிலம் தமிழகம் மட்டுமே.

தமிழகத்தில் 1 கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. 34,840 நியாயவிலைக் கடைகள் மூலமாக அரிசி, கோதுமை, சர்க்கரை, மண் ணெண்ணெய், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமா யில் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெற, தாளில் அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகளே தற்போது பயன்படுத் தப்படுகின்றன.

பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக கணினிமயமாக்கி அனைத்து அலுவலகங்கள், நிறுவனங் களை கணினி மூலம் ஒருங்கிணைத்து, இணையதளம், மின்னஞ்சல், குறுஞ் செய்தி, தொலைபேசி வாயிலாகவே நுகர்வோரின் குறைகளைப் பெற்று அவற்றைத் தீர்க்க ரூ.330 கோடியில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய் யப்பட்டது. அதன்படி கடந்த 2015-ல் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களில் பொதுவிநியோகத் திட்ட செயல் பாடுகள் அனைத்தும் இணையவழி யாக கண்காணிக்கப்பட்டன. 2016-ல் இத்திட்டம் அனைத்து மாவட்டங் களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதற்காக, பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைகளில் உள்ள 6 கோடியே 90 லட்சம் உறுப்பினர்களில் ரூ.5 கோடியே 85 லட்சம் உறுப் பினர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 1 கோடியே 17 லட்சம் குடும்ப அட்டை களுக்கு முழுமையான ஆதார் விவரங் களும், 70 லட்சம் குடும்ப அட்டை களுக்கு குறைந்தபட்சம் ஒருவரது ஆதார் விவரங்களும் பெறப்பட்டுள் ளன. 99 சதவீத குடும்ப அட்டைகளுக்கு குறைந்தது ஒரு ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டை தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. இதற்கான செலவை அரசே ஏற்கும்.

குடும்ப அட்டைதார்களின் செல் போனில் குறுஞ்செய்தி வந்ததும் தங்களது நியாயவிலைக் கடைகளுக்கு சென்று மின்னணு குடும்ப அட்டை யைப் பெற்றுக்கொள்ளலாம். அது வரை தற்போதுள்ள குடும்ப அட்டை மூலமாகவே பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். தகுதியான நபர் களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவது, மின்னணு குடும்ப அட்டை மூலம் உறுதிசெய்யப்படும். இதுதொடர்பான குறைகளை தெரி விக்க 1800-425-5901 என்ற இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே ஜெயலலிதாவின் லட்சியம். அவரிடம் பயிற்சி பெற்ற நாங்கள் அதை முழு முனைப்போடு செயல்படுத்துவோம் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

விழா தொடங்கும் முன்பு, ஜெயலலிதா படத்துக்கு முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேடையில் ஜெயலலிதா படம் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. விழாவில் உணவு, நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜு, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அதிமுக எம்.பி.க்கள் கே.என்.ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும் புதூர்), பி.வேணுகோபால் (திரு வள்ளூர்), அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT