உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற எதிர்காலத்தில் இந்திய அனுபவத்துடன், சீனாவின் தொழில் நுட்பம் இணைய வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் மன்னார் குடி எஸ்.ரெங்கநாதன் வலியுறுத்தி னார்.
தமிழகத்தில் விவசாய உற்பத் தியை அதிகப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளை அயல் நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தின்படி முதல்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் 19 பேர், அண்மையில் சீனாவுக்கு சென்று வந்தனர்.
அந்த பயணக் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னோடி விவசாயியும், காவிரி நீர் உரிமைக்காக சட்டப் போராட் டம் நடத்தியவருமான மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தனது பயண அனுபவங்கள் குறித்து ‘தி இந்து’ விடம் கூறியது:
இந்தியாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா எப்படி தனது உணவு தேவையைச் சமாளித்து வருகிறது என்பதை அறிந்து கொள்ள இந்தப் பயணம் உதவியது. சீன அரசு ஷாங்காயில் அமைத்துள்ள தொழில் நகரத்தில் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நடுவே 50 ஏக்கர் பரப்பளவில் விவசாய விளைபொருள் உற்பத்தி மையத்தை உருவாக்கி உள்ளது. அந்த நகரத்தின் உணவுத் தேவையை, இந்த மையத்தைக் கொண்டே நிறைவு செய்துகொள் கிறது.
பெய்ஜிங் மாநிலத்தில் லியூமினி யிங்கில் உள்ள ‘ஈக்காலஜி சயின்டிஸ்ட் பாப்புலேசன் பார்க்’ என்ற ஒரு தனியார் கூட்டமைப்பு, 500 ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்ட அந்த கிராமத்தை விவசாய விளைபொருள் உற்பத்தி மையமாக உருவாக்கி உள்ளது.
கோழி, கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் கழிவுகளைப் பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்கின்றனர். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், பெட்ரோல் நிலையங்கள், சிறு வணிக நிறுவனங் களை உள்ளடக்கிய தன்னிறைவு பெற்ற கிராமமாக அந்தப் பூங்கா திகழ்வதுடன் பெய்ஜிங் நகரத்தின் உணவுத் தேவையைச் சமாளிப்பதில் பெரும் பங்காற்றும் மையமாகச் செயல்படுகிறது.
இந்தியாவில் பல தொழில் நகரங்களை உருவாக்கியுள்ள இந்திய அரசு, அதன் மத்தியில் விவசாய உற்பத்தித் தொழிலை அடையாளப்படுத்தவில்லை. அவ்வாறு செய்திருந்தால் எதிர்கால உணவு உற்பத்தியைப் பெருக்க, அதிக அளவிலான இந்திய இளைஞர்களை நாம் முன்கூட்டியே விவசாய உற்பத்தியின் பக்கம் திருப்பியிருக்க முடியும்.
எதிர்காலத்தில் சீனாவின் தொழில்நுட்பத்தையும், இந்தியா வின் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் உணவு உற்பத்தியில் 2 நாடுகளும் தன்னிறைவை அடையும்.
முதல்கட்டமாக இந்தியா, சீனா இடையே விவசாயப் புரிந்துணர்வு செய்வதற்கான முயற்சி எடுக்க வேண்டும். இதில் உள்ள சாதக, பாதகங்களை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் கலந்து ஆலோசித்து விஞ்ஞானிகள், வேளாண் அதிகாரிகள் கொண்ட குழுவை சீனாவுக்கு அனுப்பி, சீனாவின் விவசாய தொழில்நுட்பங்கள், அதன்மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களின் தன்மைகள் குறித்து ஆராய்ந்து, அதுபோன்ற திட்டங்களை இந்தியாவில் செயல் படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.