தமிழகம்

குமரியில் புத்தாண்டின் முதல் சூரிய உதயம்: சுற்றுலாப் பயணிகள் பரவசம்

செய்திப்பிரிவு

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி யில் நேற்று புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் பார்த்து ரசித்தனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டை கொண்டாட நேற்று முன்தினம் முதலே தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

இதனால் முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை, படகு இல்லம், காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், பகவதியம்மன் கோயில் ஆகிய இடங்களில் கூட்டம் அலை மோதியது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்குள்ள தங்கும் விடுதிகளில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் விடிய விடிய அவர்கள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து 2017-ம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தைக் காண நேற்று அதிகாலை 5 மணி முதலே கடற்கரைச்சாலை, முக்கடல் சங்கமம், காட்சிக் கோபுரம், விவேகானந்தா கேந்திரா கடற்கரை உள்ளிட்ட இடங் களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

காலை 5-45 மணிக்கு விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை பின்புறம் கடலுக்குள் இருந்து பொன்னிறக் கதிர்களை வீசியவாறு தங்கப் பந்து போல் சூரியன் உதித்ததை பார்த்து அவர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஒருவொருக்கொருவர் கட்டித் தழுவியும், கைகுலுக்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொணடனர். சூரியன் உதயமான எழில் காட்சியை குடும்பத்தினர், நண்பர்களுடன் பலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், புத்தாண்டு தினமான நேற்று பொன்னிறக்கதிர்களால் வானும், கடலும் ஜொலிக்க தங்கப்பந்து போல் சூரியன் உதயமாகும் காட்சியை பரவசத்துடன் ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

SCROLL FOR NEXT