தமிழகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 2 ஆயிரம் பேருந்துகள், 35 ரயில்கள் இயக்க ஏற்பாடு: பாதுகாப்பில் கமாண்டோ உட்பட 9 ஆயிரம் போலீஸார்

செய்திப்பிரிவு

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு (டிச.5) திருவண்ணா மலைக்கு 2 ஆயிரம் பேருந்துகளும், 35 ரயில்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள், தங்கள் பணிகள் குறித்து விளக்கமளித்தனர்.

அப்போது அவர்கள் கூறும் போது, “அண்ணாமலையார் கோயில் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உறுதி அளித் துள்ளது. 3 நுழைவு வாயில்களில் மூன்று மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக சோதனையிடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தேர் சக்கரங்களுக்கு ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்படுகிறது.

பாதுகாப்புப் பணியில் 9 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். 34 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 23 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. அன்னதானம் வழங்க 193 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள 900 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 33 தற்காலிகக் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 13 மருத்துவ முகாம்கள் மற்றும் 3 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். உணவு மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

மருத்துவம் சார்ந்த பணியாளர் களுக்கு விடுப்பு கிடையாது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் என்று 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும். மகா தேரோட்டத்தின்போது ஒவ்வொரு தேருக்கும் ஒரு மருத்துவ ஆம்புலன்ஸ் பின்தொடர்ந்து செல்லும். அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 2,000 பேருந்துகள் மூலமாக 6,000 நடைகள் இயக்கப்படும். ரயில்வே துறை சார்பில் 35 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில், 8 சிறப்பு ரயில்கள். சென்னையில் இருந்து காட்பாடி மற்றும் விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 363 பேர் பணியில் ஈடுபடுவர். மலை மீது 25 கமாண்டோ வீரர்கள் பணியில் இருப்பர். தி.மலை யில் உள்ள 26 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஆகியவை டிசம்பர் 2 மற்றும் 5-ம் தேதி மூடப்படும். திருவூடல் வீதியில் உள்ள டாஸ் மாக் கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செய லாளர் பனிந்தரரெட்டி, இயக்குநர் பிரகாஷ் உட்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT