வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை உயிரினமான இந்திய காட்டுக் கழுதை, குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.
இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய காட்டுக் கழுதைகள், அழிந்து வரும் அரிய வகை உயிரினத்தை சேர்ந்தவையாகும். குஜராத் ஜூனாகத்தில் உள்ள சக்கர்பாக் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஆண், ஒரு பெண் என இரு இந்திய காட்டுக் கழுதைகள், இப்பூங்காவுக்கு 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. இவை இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக, இவற்றின் திறந்தவெளி இருப்பிடம், இயற்கையான வாழ்விடத்தை போன்று உருவாக்கப்பட்டது.
இதன் விளைவாக தாய்மையடைந்த காட்டுக் கழுதை, கடந்த 3 மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டு, பிரசவ அறையினுள் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆரோக்கியமான பெண் குட்டி ஒன்றை அது ஈன்றுள்ளது. இந்த பூங்காவில் பிறக்கும் முதல் இந்திய காட்டுக் கழுதை குட்டி இதுவாகும்.
இந்த காட்டுக் கழுதைகள் தற்போது, குஜராத்தில் அரபிக் கடலோரத்திலுள்ள உப்பு பாலைவனமான ‘ரன் ஆப் கட்ச்’ பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மேற்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென்கிழக்கு ஈரான் ஆகிய நாடுகளில் பரந்து காணப்பட்ட இந்த உயிரினம், தற்போது குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மட்டுமே உள்ளது. வாழ்விடம் சுருங்குவதாலும், உணவு மற்றும் நீர் பற்றாக்குறையாலும், நோய் தாக்குதலாலும் இந்த உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளது. வன உயிரின சட்டப்படி இந்த உயிரினம் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். இது அழிநிலை விலங்காகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.