மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்ததின் மூலம் பாஜகவின் வேகத்தடை நீங்கிவிட்டது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயலாளருமான இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னை கமலாலயத்தில் அவர் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் இணைந்தது குறித்து இப்போது விமர்சனம் செய்ய விரும்பவில்லை. தெளிவில்லாத ஒரு சூழ்நிலையில் விஜயகாந்த் யாரோடு வருவார்? வருவாரா? மாட்டாரா? என்று நிலையில் அது தெளிவாகிவிட்டதில் எனக்கு ஆறுதல்.
அதனால் எங்கள் வேலைகளை விரைவாக தொடங்கமுடியும் என்பதால் ஒரு மகிழ்ச்சி. பாஜகவின் வேலைகள் தொடங்கிவிட்டன. விரைவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையே கூட முடிவுசெய்து விடுவோம்.
எங்களுக்கான வேகத்தடை நீங்கிவிட்டது. பாஜக வேலையை விரைவாகத் தொடங்கியுள்ளது.
பாஜகவுடன் இதர கட்சிகள் இணைவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தேர்தலில் எது சிறிய கட்சி, பெரிய கட்சி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்கிறார்கள்.
பாஜக தனித்துவிடப்பட்ட கட்சியல்ல. தனித்துவம் வாய்ந்த கட்சி. அப்போது மோடியை பிரதமராக்க வேண்டுமென்று ஆவலாக அனைவரும் வந்தார்கள். இப்போது தாங்களே முதல்வராக வேண்டுமென்று விலகிச் சென்றிருக்கிறார்கள். இது இயல்புதான்.
பாஜக சார்பில் எந்த முதல்வரையும் முன்னிறுத்தவில்லை.
சரத்குமார் எங்கேயாவது ஒரு இடத்தில் செட்டில் ஆகட்டும். நல்லதுதான். சரத்குமார் நிச்சயம் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்றும் நினைக்கவில்லை. போனதைப் பற்றியும் வருத்தமில்லை.
ஒவ்வொரு கட்சியும் தன் கட்சியின் வெற்றியை மனதில் வைத்து திட்டமிடுகிறார்கள். அதை யாரும் குறைசொல்ல முடியாது. பாஜகவும் தன் வெற்றியை வைத்து திட்டமிட உரிமை இருக்கிறது. அந்த திட்டத்தை மனதில் வைத்துதான் செய்கிறோம்.
இவ்வளவு தூரம் நீங்கள் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டீர்களே என்று கேள்வி கேட்கலாம். தமிழகத்தின் மூத்த தலைவர் அனுபவம் வாய்ந்தவர் நேற்று முன் தினம் பேசிய அறிக்கையில், விஜயகாந்த் எங்களுடன் வருவார் என்று பேசுகிறார்.
திமுகவுடன் நாங்கள் போகமாட்டோம் என்று அறிவித்த பிறகும், பிரேமலத தில்லுமுல்லு கட்சி என்று திமுகவை விமர்சித்த பிறகும் கருணாநிதி அப்படி பேசுகிறார்.
எங்களைப் பொறுத்தவரையில் விஜயகாந்த் எங்களைப் பற்றி எதுவும் வர்ணனை செய்யவில்லை. மோசமாக விமர்சிக்கவில்லை. மாறாக, எங்களுடன் வருவதாகதான் சொல்லியிருந்தார். ஆனால், அரசியலில் இதெல்லாம் நடக்கும்.
ஒவ்வொரு கட்சியும் தன் பங்குக்கு பலம் சேர்ப்பதற்காகவே கூட்டணி அமைப்பார்கள். நாங்கள் எதிர்பார்த்ததில் தவறில்லை. விஜயகாந்த் முடிவெடுப்பதற்கும் உரிமை உள்ளது.
மக்கள் நலக் கூட்டணியில் மக்கள் நலன் பலியாகிவிட்டது. விஜயகாந்த் அணி என்று மாறிவிட்டது.
பாஜக வாக்குகள் இன்னும் அதிகரிக்கும். பாஜக கூட்டணி குறித்து நாளை இறுதி முடிவு செய்யப்படும். கூட்டணி தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் பேசுவார்.
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.