தமிழகம்

பாஜகவுடன் மதிமுக கூட்டணி பேச்சு; மோடியே பிரதமர் ஆவார் என்கிறார் வைகோ

செய்திப்பிரிவு

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பூர்வாங்க பேச்சுவார்த்தை துவங்கிவிட்டதாக தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நரேந்திர மோடிதான் பிரதமர் ஆவார் என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தாண்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். அதன்படி, சென்னையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது:

கடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக போட்டியிடாவிட்டாலும், மீனவர்கள் பிரச்சினை, நதிநீர்ப் பங்கீடு, தமிழீழ ஆதரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மது ஒழிப்புப் பிரச்சாரம் ஆகியவற்றில் தீவிரமாக போராட்டங்கள் நடத்தியுள்ளோம். முகநூல்களிலும், இணையதளங்களிலும், இளைய தலைமுறையினரிடையே மதிமுக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தாலும், அதை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். கஸ்தூரி ரங்கன் அறிக்கை அமலுக்கு வந்தால், முல்லைப் பெரியாறு அணை பாதுகாக்கப்படும்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழீழம் தான் தீர்வு. அதற்கு பொதுவாக்கெடுப்பு தேவையானது. வரும் நாடாளுமன்றத் தேர்தல், இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான முதுகெலும்பில்லாத காங்கிரஸ் அரசு மீண்டும் வரக்கூடாது. காங்கிரஸை ஆதரிக்கும் அல்லது காங்கிரஸ் ஆதரவளிக்கும் ஆட்சியும் வரக்கூடாது.

எனது கணிப்புப்படி, வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராவார். பாஜக அணியில் மதிமுக இடம்பெற, தமிழருவி மணியன் முயற்சி எடுத்து வருகிறார். பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவும், நானும் சென்னையில் சந்தித்து மூன்று மணி நேரம் பேச்சு நடத்தினோம்.

பின்னர் பாஜக, அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினேன். கூட்டணி தொடர்பாக பூர்வாங்கப் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளோம். இதில், எத்தனை தொகுதிகள் யாருக்கு என்பதெல்லாம் முடிவு செய்யவில்லை. மதிமுகவோ, பாஜகவோ கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

ஊழலற்ற அரசியல் இலக்கைக் கொண்டு, நாடாளுமன்றத்தில் மதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க, நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

தமிழக வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும், ஈழத்தை வென்றெடுக்க வேண்டும், ஊழல் களையப்பட வேண்டும் இதுவே எங்கள் கொள்கை. முதலில் ஈழத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது.

காங்கிரஸ் செய்த தவறை பாரதிய ஜனதா தலைவர்கள் செய்ய மாட்டார்கள். அதற்கு வாய்ப்பே வராது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் என்னென்ன அடிப்படை தேவைகள் அவசியம் என்பது பற்றி 3 மாதத்துக்கு முன்பே ஆய்வுப் பணியை தொடங்கிவிட்டோம்.

அதிமுகவுடன் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறிய பின், அவர்களுடன் மீண்டும் உடன்பாடு ஏற்படும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. நான் நடைப் பயணத்திலிருந்த போது, காரில் வந்த முதல்வர் ஜெயலலிதா என்னை சந்தித்துப் பேசியது அரசியல் நாகரிகமாகும். அதற்கு அரசியல் உள்நோக்கம் கூற முடியாது" என்றார் வைகோ.

தமிழீழக் கொள்கையை பா.ஜ.க., ஆதரிக்குமா என்ற கேள்விக்கு, மதிமுகவின் அனைத்துக் கொள்கையையும், பாஜக ஆதரிக்க வேண்டியதில்லை என்றார்.

குஜராத் கலவரம் தொடர்பான நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டு குறித்து பின்னர் பதிலளிப்பதாகவும் அவர் கூறினார்.

சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் பாஜகவுடன் சேது திட்டத்தை ஆதரிக்கும் மதிமுக கூட்டணி சேரும் நிலையில், தற்போதைய நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, சுற்றுச்சூழல் குறித்த பேச்சுகள் முன்பு எழாத போது ஆதரித்ததாகவும், தற்போது சேது திட்டம் குறித்து, மறுபரிசீலினை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைகோ கூறினார்.

SCROLL FOR NEXT