நாட்டிற்கு தற்போது உறுதியான அரசியல் மாற்றமும், வலிமையான அரசாங்கமுமே தேவை என வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கல்லூரி மாணவ, மாணவிகளைச் சந்திக்கும் நிகழ்ச்சி கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைய தலைமுறையினரிடையே தலைமைப் பண்பை உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரவிசங்கர் பேசியது:
நாடாளுமன்றத் தேர்தலில் இளைய சமுதாயத்தினர் அனை வருமே மாற்றத்தை முன்வைத்து வாக்களிக்க வேண்டும். இரும்பு, நிலக்கரி, எரிபொருட்கள் என அனைத்து வளங்களும் இந்தியாவில் உள்ளன. இந்த வளங்கள் அனைத்துக்கும் மேலே நாம் வாழ்க்கை நடத்திக் கொண்டு வெளிநாடுகளில் பிச்சைக்காரர்களைப் போல கையேந்தியுள்ளோம்.
எனவே ஆட்சி மாற்றத்தை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் கொண்டு வரவேண்டும். மாற்றம் வேண்டும் என்பதற்காக, புதிதாக தொடங்கிய கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டாம். அது ஒன்றாம் வகுப்பு மாணவனிடன் கார் ஓட்டச் சொல்வதுபோல இருக்கும். 4 ஆண்டுகள் அவர்கள் டெல்லியை ஆளட்டும். அதன் பிறகு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
நமக்கு தற்போது உறுதியான அரசியல் மாற்றமும் வலிமையான அரசாங்கமுமே தேவை. இளைய தலைமுறை மட்டுமே இந்த நாட்டின் நம்பிக்கையாக இருந்து, மாற்றத்தைக் கொடுக்க முடியும்.
சிறிய நாடான இலங்கை 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால் இந்தியா வெறும் 4 சதவீத வளர்ச்சியை மட்டுமே கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் சிறந்த நாடான இந்தியா தற்போது விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கியுள்ளது.
இலங்கையில் 80 ஆயிரத் துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது இந்திய அரசு முயற்சி எடுத்திருந்தால், அதை நிச்சயம் தடுத்திருக்கலாம். எனவே தற்போது ஆட்சி மாற்றம் தேவை யாக உள்ளது.
இலங்கையிலிருந்து வந்துள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும். அதை தற்போது முன்னெடுத்து நாங்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். 10 லட்சம் கையெழுத்துகளை மக்களிடம் பெற்றும் பிரதமருக்கு அனுப்ப உள்ளோம்.
நமது நாட்டில் ஜாதிகள் ஒழிய வேண்டுமென்றால் ஆன்மிகம் செழித்தோங்க வேண்டும். அண்டை நாடுகளுடன் நல்லுறவு, வலிமையான அரசு, மது ஒழிப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும். மிக மோசமான நிலையில் உள்ள அரசியல் சூழலை விரைவில் மாற்றம் வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாழும் கலை அமைப்பு சார்பில் சர்வே எடுத்து வருவதாகவும் ரவிசங்கர் தெரிவித்தார்.