கோடநாடு காவலாளி கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் தொடர்ந்து வருகிறத.
கோடநாடு கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த கனகராஜ் என்ற வாகன ஓட்டுநர் சாலை விபத்தில் பலியான நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் மற்றொரு சந்தேக நபர் பாலக்காடு அருகே சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.
சாயான் என்பவர் பாலகாட்டில் இன்று சாலை விபத்தில் சிக்கினார். சாயான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்றபோது நின்றிருந்த லாரி மீது கார் மோதியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த சயான் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்படுகிறார். சயான் கோவையில் திருச்சி ரோட்டில் வசிக்கிறார். இவரது மனைவி கோவை மதுக்கரையை சேர்ந்தவராவார்.
கொலையும் தொடரும் மர்மங்களும்..
கடந்த 24-ம் தேதி உதகையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். உடனிருந்த காவலாளி கிருஷ்ணபகதூருக்கு காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் சக காவலாளி கிருஷ்ண பகதூரை தொடர்ந்து போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கனகராஜ் பலியானார். இவர் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவராவார்.
கனகராஜ் சாலை விபத்தில் பலியான நிலையில் மற்றொரு சந்தேகத்துக்குரிய நபரும் சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் சிக்கினார்:
முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) திடீர் திருப்பமாக கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சிக்கினார். இறந்த ஓம் பகதூரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துணியில் மலையாள மொழி எழுத்துகள் இருந்ததால், கேரளாவைச் சேர்ந்த நபர்கள், கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
கோடநாடு வந்த வாகனங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த எஸ்டேட் அருகே வார்விக் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் வாகன நம்பர் பிளேட் கிடைத்தது.
இதன் அடிப்படையில் தனியார் விடுதிகளில் தீவிர விசாரணை நடந்தது. அப்போது அளக்கரை என்ற பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், கேரளாவைச் சேர்ந்த கொலையாளிகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்தியது தெரியவந்தது.
இதனால், தனிப்படையில் ஒரு பிரிவினர் கேரளாவுக்கு விரைந்தனர். அந்த நபரை சுற்றி வளைத்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நபர் கொடுத்த தகவலின் பேரில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சஜீஷன், தீபு மற்றும் சந்தோஷ் ஆகியோரை தமிழக போலீஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
கூடலூர் முக்கியப் புள்ளிக்கு தொடர்பா?
அண்மையில் கூடலூரைச் சேர்ந்த முக்கிய புள்ளி அதிமுகவில் இணைந்தார். இவர் அதிமுக மேலிடத்துக்கு நெருக்கமானவர். கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் உள்ள அனைத்து மராமத்துப் பணிகளையும் கவனித்து வந்தார். இதனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் வெற்றி பெற இவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவத் துக்கு மூளையாக இவர் செயல்பட்டி ருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்தை உறுதி செய்வதுபோல இவர் சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்றுவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.