தமிழகம்

மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுவதில் உறுதியாக உள்ளோம்: நாராயணசாமி பேட்டி

செய்திப்பிரிவு

இந்திய-இலங்கை மீனவர்கள் இடையே 4-வது முறை பேச்சு வார்த்தைக்கு முன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகள் விடுவிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் புதுச்சேரி பட்ஜெட் தொகை ஒதுக்கீடு இறுதி செய்வது சம்பந்த மாக பேசினேன். இதில் ரூ. 1,000 கோடி மானியமாகவும், ரூ. 200 கோடியை கடனாகவும் வழங்க அனுமதி கேட்டிருந்தேன். மத்திய நிதி அமைச்சகம் ரூ. 200 கோடிக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ரூ. 1,000 கோடி மானியம் தொடர்பாக பேசும் போது மத்திய நிதித்துறை செயலர், உள்துறை செயலர் வந்திருந்தனர். உள்துறை செயலர் ரூ. 1,200 கோடிக்கு ஒப்புதல் கொடுத்திருந்தார்.

திட்டமில்லா செலவினங்களுக் காக மத்திய அரசு கடந்த 5 ஆண்டு களாக அதிகப்படியாக கொடுக்க வேண்டிய 10 சதவீதம் தொகை கொடுக்கப்படவில்லை. எனவே அதனைக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.

பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களான முத்ரா திட்டம், சிறு குறு தொழில் களுக்கு கடன் வழங்கும் திட்டம், நகரத்தை சுத்தமாக வைத்திருக்கும் திட்டம், பசுமை மாநிலமாக ஆக்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.

கல்வியில் புதுச்சேரி முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மருத்து வத்தில் முன்னோடி மாநிலமாக உள்ளது. மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னோடியாக உள்ளோம். எனவே, மானியத்தை வழங்கினால் இதுபோன்றத் திட்டங்கள் தொடர் வது மட்டுமின்றி, மாநிலத்தை முன்னேற்ற ஏதுவாக இருக்கும் என கூறினேன். அதற்கு நிதி அமைச்சர் அடுத்த வாரத்தில் இறுதி முடிவெடுப்பதாக தெரிவித் துள்ளார். மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனை பேச்சுவார்த்தை தொடர்பாக இரு தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இரு தரப்பிலும் 4-வது முறை பேச்சுவார்த்தை விரைவில் சென்னையில் நடைபெற வுள்ளது. அதில் எந்தெந்த காலங் களில் இலங்கை மீனவர்கள் இந்திய கடல்பகுதியிலும், இந்திய மீனவர்கள் இலங்கை கடல்பகுதியிலும் மீன்பிடிப்பது என்பது குறித்தும், படகுகளை விடுவிப்பது குறித்தும் உரிய தீர்வு காணப்படும் என்று வெளியுறவு அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். மேலும் பேச்சுவார்த்தைக்கு முன்பே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவைச் சந்தித்து பேசினேன். புதுச்சேரி ரயில் நிலையத்தை நவீனப்படுத்தவும், காரைக்கால்-பேரளம் அகல ரயில் பாதை திட்டத்துக்கும் ரூ.160 கோடி முழுமையாக ஒதுக்கி நிறைவேற்றுவதாகவும், புதுச்சேரி-சென்னை ரயிலை விரைவு ரயிலாக மாற்றவும், பகல் நேரத்தில் புதுச்சேரி-சென்னைக்கு விரைவு ரயில் விடவும் கோரிக்கை வைத்தேன். அதனை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.

சென்னை - புதுச்சேரி துறை முகங்கள் இடையே சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திடும் நிகழ்ச்சி, ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும். அதில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கலந்து கொள்கிறார். முதற்கட்டமாக ஆண்டுக்கு 1 மில்லியன் டன் ஏற்றுமதி செய்யப் படும். பின்னர் இது 4 மில்லியன் டன்னாக உயரும்.

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, கொச்சி போன்ற நகரங்களுக்கு விமான சேவை தொடங்க பணிகள் நடக்கின்றன. ரூ. 2,500 பயணக்கட்டணம் என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் இதற்கு முன்வந்துள்ளன.

புதுச்சேரியில் கடந்த மே, ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பணிபுரிந்த 3,380 அரசு ஊழியர்களுக்கு தேர்தல் கால படித்தொகை ரூ.3.29 கோடி வழங்கப்படுவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அது வழங்கப்படும். இதே போல் காவல்துறையினருக்கும் தேர்தல் கால பணித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.

தமிழக முதல்வரை சந்திப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக நேரம் ஒதுக்குமாறு கோரியுள்ளேன். அவர் ஒப்புதல் தந்தவுடன் சந்திப்பேன் என்றார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் உள்ளே எழுந்துள்ள பிரச்னை குறித்து கேட்டதற்கு, மனிதவள மேம்பாட்டு அமைச்சக மும், பல்கலைக்கழக நிர்வாகமும் தான் அதனைச் சீரமைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே புதுச்சேரி அரசு தலையிடும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT