தமிழகம்

தற்காலிக பணிநீக்கத்தின்போது பிழைப்பூதியம் பெறுவதற்கான மாத உச்சவரம்பு உயர்வு: பேரவையில் மசோதா தாக்கல்

செய்திப்பிரிவு

தற்காலிக பணிநீக்கத்தின்போது பிழைப்பூதியம் பெறுவதற்கான மாத உச்சவரம்பை ரூ.3,500-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் நேற்று தாக்கல் செய்த சட்ட மசோதாவில், ‘1981-ம் ஆண்டு தமிழ்நாடு பிழைப்பூதியம் வழங்கல் சட்டத்தின்படி தற்காலிக பணிநீக்கத்தின்போது பிழைப்பூதியம் பெறுவதற்கான மாத உச்சவரம்பு ரூ.3,500 ஆக உள்ளது. இதை ரூ.15 ஆயிரமாக உயர்த்த மாநில தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை செயல்படுத்த சட்டம் கொண்டு வரப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகை அதிகரிப்பு

அமைச்சர் தாக்கல் செய்த மற்றொரு மசோதாவில், ‘1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி தகுந்த காரணமின்றி ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர் உரிய காலத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். அவ்வாறு மேல்முறையீடு செய்யும்போது யாரையும் விசாரணைக்கு அழைக்கவும், அபராதத் தொகையை அதிகரிக்கவும் சட்டத்தை திருத்துவது என அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

தனி அலுவலர் பதவி

வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தாக்கல் செய்த சட்ட மசோதாவில், ‘தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் விற்பனைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பணிக்காலம் 30-5-2015-ல் முடிவடைந்துவிட்டது. விற்பனைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்ய காலதாமதமாகும் என்பதால் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கச் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT