தமிழகம்

சாலை விபத்தில் தந்தை பலி: 10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகன்

செய்திப்பிரிவு

வேப்பனப்பள்ளி அருகே தந்தை சாலை விபத்தில் இறந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு இறுதிச்சடங்கில் மகன் பங்கேற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னசூளாமலையைச் சேர்ந்தவர் பாரத் (45). மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு பவித்ரா என்கிற மகளும், சைலேஷ், சுபாஷ் சந்திரபோஸ் என 2 மகன்களும் உள்ளனர். பவித்ரா கல்லூரியில் படித்து வருகிறார். சைலேஷ் 12-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் உள்ளார். சுபாஷ் சந்திரபோஸ் கே.திப்பனப்பள்ளியில் உள்ள மாதிரி பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வருகிறார்.

பாரத் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வேப்பனப்பள்ளியில் இருந்து சின்னசூளாமலைக்கு சென்று கொண்டிருந்தார். ராமச்சந்திரம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம், பாரத் சென்ற இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த பாரத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகன் சுபாஷ் சந்திரபோசுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தந்தை இறந்த நிலையிலும், கல்வி மீது உள்ள ஆர்வத்தால் அவர் தேர்விற்கு தயாரானார். நேற்று நடந்த அறிவியல் தேர்வை குந்தாரப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுதிவிட்டு, பின்னர் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

தந்தையின் வருமானத்தைக் கொண்டே சுபாஷ், பவித்ரா ஆகியோர் கல்வி கற்று வந்தநிலையில் தற்போது அவரது இழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவர்களது எதிர்கால கல்வி கேள்விக்குறியாக உள்ளதாகவும் உறவினர்கள் சிலர் வேதனை தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT