தமிழகம்

திமுக உறுப்பினர்களின் இடைநீக்கம் ஏற்புடையது அல்ல: வாசன்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது காவலர்களால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதுடன், ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல. இது மக்களுக்காக பணியாற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரானது. மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள்.

சட்டப்பேரவையில் முக்கிய விவாதங்களின்போது எதிர்க்கட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டிய பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமக நடந்து கொண்டிருப்பது சரியானதல்ல.

சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் மீது அலட்சியப்போக்கை கடைப்பிடிக்கக் கூடாது. சட்டப்பேரவையில் விவாதம் செய்ய எதிர்க்கட்சிகளை அனுமதிக்க வேண்டும். சட்டப்பேரவையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டியிருப்பதால் திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT