தமிழகம்

பவானி ஆற்றில் தடுப்பணை பணிகளை உடனே நிறுத்த கேரளாவுக்கு உத்தரவிடுங்கள்: மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

செய்திப்பிரிவு

பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவிடவேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''காவிரியின் கிளை நதியான பவானியில், கேரள அரசு 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் காவிரி படுகையைச் சேர்ந்த, விவசாயத்தக்கும் குடிநீருக்கும் பவானியை நம்பியுள்ள தமிழக மக்கள் மத்தியில் கடும் பதட்டத்தை ஏறபடுத்தியுள்ளது.

தற்போது கேரள அரசு, தெக்குவட்டை மற்றும் மஞ்சிகண்டி ஆகிய இடங்களில் அடித்தளம் அமைப்பதற்கு மண் எடுக்கும் பணியை தொடங்கிவிட்டது. அடுத்ததாக பாடவாயல் பகுதியில் தரையை சமன் படுத்துதல் மற்றும் அடித்தளம் அமைப்பதற்கான தளவாட பொருட்களை தேக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

பவானியைப் பொறுத்தவரை. காவிரியின் முக்கியமான கிளை நதியாகும். காவிரி நதிநீர் ஆணையம் கடந்த 2007-ல் வெளியிட்ட இறுதி தீர்ப்புக்கு எதிராக கர்நாடகாவும், கேரளாவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. அதே போல் தமிழக அரசும் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இதற்கான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு டிசம்பர் 9-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜனவரி 4-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், இந்த மேல் முறையீட்டு வழக்குகளை பிப்ரவரி 7-ம் தேதி விசாரிக்க வேண்டும் என்றும், தொடர்ந்து தினசரி விசாரணை நடக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசால் இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை இதுவரை அமைக்கவில்லை. எனவே, இந்த நடவடிக்கைகள் முழுவதும், உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும், பவானி ஆற்றில் எந்த ஒரு தடுப்பணை அல்லது கட்டுமானம் மேற்கொள்ளும் திட்டம் இருந்தாலும் முன்னதாக தமிழக அரசின் முன் அனுமதி பெறாமல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை மீறியதாகிவிடும். தமிழகத்துக்கு பவானி ஆற்றின் தண்ணீர் இயற்கையாக வருவதையும் தடுப்பதாக அமைந்துவிடும். எனவே, தமிழகத்தின் முன் அனுமதி பெறாமல், கேரள அரசு பவானி ஆற்றில் மேற்கொள்ளும் தடுப்பணை பணிகளுக்கு தனது கடும் ஆட்சேபணையை தமிழக அரசு தெரிவித்துக் கொள்கிறது.

இந்த நேரத்தில், தாங்கள் நேரடியாக தலையிட்டு, பவானி ஆற்றில் கேரள அரசு மேற்கொள்ளும் பணிகளை உடனடியாக நிறுத்த அறிவுரை வழங்கும்படி, மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்தும் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழு அமைக்கப்படும் வரை, நீதிமன்றத்தில் இறுதி முடிவுகள் எட்டப்படும் வரை, தமிழக அரசின் முன் அனுமதி பெறாமல் எந்த திட்ட ப்பணிகளையும் பவானியில் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் தாங்களது உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்'' என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT