தமிழகம்

பழநி கோயில் நிர்வாகப் பணிகள் பாதிப்பு; பக்தர்கள் அவதி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

பழநி கோயில் நிர்வாகத்தில் 342 ஊழியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நிர்வாகப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தைப்பூச விழா நெருங்கிவரும் நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பிரசித்திபெற்ற பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் நிர்வாகத்தின் கீழ் பிரதான கோயிலான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், 38 உபகோயில்கள் மற்றும் மருத்துவமனைகள், பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, காதுகேளாதோர் பள்ளி, தொடக்கப் பள்ளி, கருணை இல்லங்கள், பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழநியாண்டவர் மெட்ரிக்குலேசன் பள்ளி, தொழில்நுட்பக் கல்லூரி, வேதசிவாகமப் பாடசாலை, தேவார இசைப்பள்ளி ஆகியன செயல்படுகின்றன. பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு, சாதாரண நாள்களில் தினசரி 40 ஆயிரம் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

தைப்பூசம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்துசெல்கின்றனர். தற்போது சபரிமலை சீசனையொட்டி, தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகின்றனர். இங்கு தங்கரதப் புறப்பாடு, மின் இழுவை ரயில், கம்பி வட ஊர்தி (ரோப்கார்), பூஜை கட்டணம்,

பக்தர்கள் காணிக்கை, முடிக்காணிக்கை, வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

திருப்பதிக்கு அடுத்தபடியாக….

தென்னிந்தியாவிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. ஆனால், இந்தக் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக நீடிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பக்தர்கள் குடிநீர், பஞ்சாமிர்தம், அன்னதானம், கழிப்பிட வசதி கிடைக்காமல் கடும் அவதியடைந்துள்ளனர்.

தண்டாயுதபாணி கோயில், உபகோயில்கள், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 674 ஊழியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், தற்போது 332 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். 342 ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இணை ஆணையர் பணியிடம் காலி

முக்கியப் பணியிடமான பழநி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையர் பணியிடம் கடந்த 4 மாதங்களாக காலியாக உள்ளது. 60 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிளம்பர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அர்ச்சகர், பரிசாரகம், நாதஸ்வரம், தவில், ஒத்து, தாளம் வாசிக்கும் ஊழியர் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாகவே உள்ளன. மேலும், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள், ரோப்கார், விஞ்ச் மற்றும் கருணை இல்லத்திலும் ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பழநி தண்டாயுதபாணி கோயில் மற்றும் உபகோயில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விரைவில் பழநி கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பூச விழா வர உள்ளது. அதனால், காலிப் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகமும், இந்து அறநிலையத் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கத்திடம் கேட்டபோது, அவர் கூறியது:

கடந்த ஜன. 10-ம் தேதி முதற்கட்டமாக காலிப் பணியிடங்களை நிரப்ப தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 6 அலுவலக உதவியாளர்கள், அர்ச்சகர் உள்பட 80 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை அனுப்ப அறிவிப்பு வெளியிட்டோம். ஆனால், உபகோயில்களில் பணிபுரியும் கோயில் பணியாளர்கள் சங்கம் சார்பில், பணியிடங்களை நேரடியாக நிரப்பக்கூடாது, தங்களை தண்டாயுதபாணி கோயிலில் பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெறப்பட்டுள்ளது. அதனால், அந்தத் தடையை நீக்கி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT