மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு காளைகள் தற்போது கிடை மாடு களாகி அங்கும் பராமரிக்க முடியா மல் அடிமாட்டுக்கு கேரளாவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர் பார்த்த அளவு பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை தற்போது வரை தொடங்கவில்லை. ஆனா லும், இந்த மழையை எதிர் பார்த்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை உழுது சாகு படிக்கு தயார்படுத்தி வருகின்றனர். கடந்த காலத்தில் இயற்கை உரங்கள் நிலத்துக்குக் கிடைக்க விவசாய நிலங்களில் ஆட்டுக் கிடை போடுவார்கள். தற்போது மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆட்டுக் கிடைக்கு பதில், விவசாயிகள் மாட்டுக் கிடை போடுவது அதிகரித்துள்ளது.
தொழு உரம் ஒவ்வொரு நிலத்தின் மண்வள பாதுகாப்புக்கு முக்கியமானது. ஆட்டுக் கிடையை விட, மாட்டுக் கிடையில் அதிக அளவு தொழு உரம் கிடைக்கிறது. மாட்டு சிறுநீரால் நிலம் உலர்ந்து வேருக்கு எளிதாக உரம், தண்ணீர் கிடைக்க உதவுகிறது. மாடுகள் குதிங்காலால் மண்ணை தட்டிவிட்டு செல்லும். கொம்பைக் கொண்டு மண்ணை கிளறும்.
இதனால், அடிமண் உலர்ந்து உழவு செய்வதற்கு எளிதாக இருக் கும். சாணம், சிறுநீரில் இருந்து கிடைக்கும் யூரிக் ஆக்ஸைடில் மண் ணுக்கு தேவையான நுண்ணுயிர் கள் அதிகம் உள்ளன. இவை மண்ணில் உள்ள புழுக்களுக்கு எளிதான உணவாக இருக்கிறது. வயலில் மாட்டுச் சாணம், சிறுநீர் எல்லாமே அந்த நிலத்துக்கான தொழுஉரமாக மாறிவிடுகிறது. மண்ணில் கரிமப் பொருட்கள் வளர்ச்சிக்கு முக்கியமான காரணி யாகவும் இருந்து விளைநிலங்களில் மகசூல் அதிகரிப்பதால் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம், ஊமச்சிகுளம், அலங்காநல்லூரில் தற்போது மாட்டுக் கிடை போடுவதற்கு கிடை போடுவோர் மாடுகளுடன் குவிந்துள்ளனர்.
இதுகுறித்து ஊமச்சிகுளம் அருகே பொன்னைக்கடியைச் சேர்ந்த மாட்டுக் கிடை போடும் மகேந்திரன் கூறியதாவது:
விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத மாடுகளே கிடை போடு வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மதுரையில் தற்போது ஜல்லிக்கட் டுக்கு தடை விதிக்கப்பட்டதால், அதற்காக தயார்ப்படுத்திய ஜல்லிக் கட்டு காளைகளை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாது. அந்த மாடுகளை பராமரிக்க முடியாமலும் அடிமாட்டுக்கு விற்க முடியாமலும் எங்களிடம் குறைந்த விலைக்கு விற்கின்றனர். நாங்கள் அந்த மாடுகளையும் கிடை மாடுகளாக பயன்படுத்துகிறோம்.
ஏக்கருக்கு மாட்டுக் கிடை போட 2 ஆயிரம் ரூபாய் கேட்போம். தினமும் 5 ஏக்கர் வரை கிடை போடு வோம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கிடை போடுவோம். கிடை போடுவதற்கு 500 மாடுகள், 700 மாடுகள், 1,000 மாடுகள் வரை அழைத்து வருவோம். தமிழகம் மட்டுமில்லாது கேரளாவுக்கும் செல்வோம். இந்த ஆண்டு தமிழகத் திலும், கேரளாவிலும் இந்த நேரத் தில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. அதனால், மாடு களை கிடை போட யாரும் அழைப்ப தில்லை.
இதனால், வருவாய் இல்லா மலும் தங்குவதற்கு இடமின்றியும் சிரமம் அடைந்துள்ளோம். தண்ணீர் இல்லாததால் மாடுகளையும் பரா மரிக்க முடியவில்லை.
வருமானத்துக்கு வழியில்லா ததால் பலவீன மடைந்த மாடுகளை கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்புகிறோம். இதில் கிடைக்கும் பணத்தில் பிழைப்பு நடத்துகிறோம் என்றார்.