தமிழகம்

நெல்லை அருகே மாதா ஆலய விழாவில் மின் கம்பியில் சப்பரம் உரசி 4 பேர் பலி: 26 பேர் காயம்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம், உவரி கடற்கரை கிராமத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவின்போது, மின்கம்பியில் சப்பரம் உரசியதில், மின்சாரம் தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழந் தனர். 26 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது உவரி கிராமம். இங்கு கடற் கரையை ஒட்டியுள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய விழா 10 நாட்களாக நடைபெற்று வந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று காலை திருப்பலி நடை பெற்றது. தொடர்ந்து சப்பர பவனிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மரத்தாலும், இரும்பாலும் உருவாக் கப்பட்டிருந்த 15 அடி உயர சப்பரத் தில், வேளாங்கண்ணி மாதா சொரூபம் வைக்கப்பட்டு காலை 9.30 மணிக்கு பவனி தொடங்கியது.

தாழ்வான மின்கம்பி

சப்பரத்தை 20 இளைஞர்கள் தோளில் சுமந்து வர, அதன் முன்னும், பின்னும் பக்தர்கள் வந்தனர். ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தெருவுக்குள் வந்தபோது, தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது சப்பரத்தின் மேல்பகுதி உரசியது. இதில் சப்பரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து, அதை தூக்கிச் சென்றவர்களைத் தாக்கியது. அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். சப்பரமும் சாய்ந்தது. அருகில் நின்ற பக்தர்கள் சிலரும் காயமடைந்தனர்.

அவர்களில் உவரியைச் சேர்ந்த தாசன் மகன் ராஜா(31), ஜோன் மகன் கிளைவ்(25), நெல்சன் மகன் ராஜ்(19), செலஸ்டின் மகன் நிமோசன்(18) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர். அவர் கள் அருகில் உள்ள தனியார் மருத் துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்பி விக்ரமன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி.விஷ்ணு மற்றும் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘சப்பர பவனியை பாதியில் நிறுத்தக் கூடாது. கிராமத்தின் நலனுக்காக சப்பர பவனியை ஆலயத்தில் நிறைவு செய்ய வேண்டும்’என்று ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். சரிந்து கிடந்த சப்பரத்தை மீண்டும் தெருக்கள் வழியாக தூக்கிச் சென்று, ஆலயத்தில் பாதுகாப்பாக வைத்தனர். அதில் இருந்த மாதா சொரூபம் ஆலயத்துக்குள் வைக்கப்பட்டது.

கிராம மக்கள் புகார்

‘சப்பர பவனியின்போது மின் சாரத்தை துண்டிக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபடவில்லை’ என்று உவரி கிராம மக்கள் குற்றம் சாட்டினர். ஆனால், ‘மின்சாரத்தை துண்டிக்கவும், மின்வயர்களை மாற்றி அமைக்கவும் மின்வாரியத் துக்கு, விழா ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவிக்கவில்லை’ என்று மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ‘சப்பர பவனிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்கப் படவில்லை’ என்று போலீஸார் தெரிவித்தனர். சப்பர பவனியின் போது 4 பேர் பலியானது கிராமத் தையே சோகத்தில் ஆழ்த்தியிருக் கிறது.

முதல்வர் இரங்கல்

முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

நெல்லை மாவட்டம், உவரி கிராமத்தில் நடந்த அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா சப்பர பவனியின்போது, உயர் மின் அழுத்த கம்பியின் மீது சப்பரம் உரசி மின்சார விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்த ராஜ், கிளைவ், ராஜா, நிமோசன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதி திராவிடர் நலத் துறை அமைச் சர் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சி யர் ஆகியோர் உடனடியாக உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சந்தித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.1 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரம், லேசான காய மடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப் படும்.

SCROLL FOR NEXT