தமிழகம்

சாதி, மத, தேசப் பிரிவினைகளை யோகா அகற்றுகிறது: ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேச்சு

செய்திப்பிரிவு

யோகா சாதி, மத, தேசப் பிரிவினைகளை அகற்றுகிறது. இதன்மூலம், உலக அமைதிக்கு வித்திடுகிறது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசினார்.

கோவை ஈஷா யோக மையத்தில் 3-வது உலக யோகா தினக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள், கோவையைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள், எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் மட்டுமல்லாது கோவை நகரிலிருந்தும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பரவலாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:

''ஈஷா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 112 அடி உயர ஆதியோகி திருமுகம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது, ஈஷா மையம் ஏற்படுத்தியுள்ள பெருமைமிகு நிகழ்வு. ஈஷாவிலுள்ள ஒவ்வொருவரும் உற்சாகமாய் இருக்கின்றனர். இந்தியாவின் கலாச்சாரத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சத்குரு தலைசிறந்த அடையாளமாக திகழ்கிறார்.

மாறுபட்ட பார்வையும் சிந்தனையும் கொண்ட யோகியான சத்குரு, தற்போதைய சமூகத்திற்கு ஏற்றவாறு, பாரம்பரிய யோகாவை இன்னர் இன்ஜினீயரிங் என்ற பெயரில் வழங்குவது சாலப் பொருத்தமாய் இருப்பதாகவும், சத்குருவின் இச்செயல் காலத்தின் தேவை.

இன்றைய சூழலில் அனைவரும் மன அழுதத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையிலிருந்து வெளிவர யோகா சிறந்த துணையாய் இருக்கும். ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் உண்டாகும் நீரிழிவுபோன்ற நோய்களை சரிசெய்து, ஆரோக்கியமான இந்தியாவிற்கு யோகா வழிவகுக்கும். இளைஞர்கள் பல்வேறு தீயப் பழக்கங்களுக்கு அடிமையாவதை தடுக்க யோகா அவசியமாகிறது. நல்வழிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் 5000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஈஷா யோகப் பயிற்சிகள் வழங்கியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஈஷா யோகா சென்றுசேர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இன்றைய காலகட்டத்தில், யோக முறைகளின் தூய்மை மாறாமல் உலகிற்கு வழங்கக் கூடிய யோகா ஆசிரியர்களின் படையை உருவாக்குவது அத்தியாவசிய தேவையாய் உள்ளது. யோகா ஒரு மனிதனுக்குள் அனைத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடிய குணத்தை ஏற்படுத்தி சாதி, மத, தேசப் பிரிவினைகளைஅகற்றுகிறது. இதன்மூலம், உலக அமைதிக்கு வித்திடுகிறது.

அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் யோகா சென்றடைய வேண்டும். ஈஷா அறக்கட்டளை போன்ற நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்'' என்று ஆளுநர் பேசினார்.

SCROLL FOR NEXT