தமிழகம்

காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் இல்லை: முதல்வர் நாராயணசாமியிடம் மத்திய அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்போவதில்லை என்று முதல்வர் நாராயணசாமியிடம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்திருக்கிறார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினார். அப்போது, மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதில் புதுச்சேரிக்குட்பட்ட காரைக்கால் பகுதியும் ஒன்று. காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. மக்களும், விவசாயிகளும் எதிர்க்கும் திட்டம் தேவையில்லை என்று முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஹைட்ரோ கார்பன் திட்டம் பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் காரைக்காலில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. காரைக்காலில் இருந்து 10 கி.மீ தொலைவில் நாகையில்தான் செயல்படுத்தப்பட உள்ளது.

மக்கள் ஒப்புதல் பெற்றுத்தான் எரிவாயு திட்டம் எந்த இடத்திலும் நிறைவேற்றப்படும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக செய்ய மாட்டோம் என்று தெரிவித்தார். இருப்பினும் தமிழக பகுதி விவசாயிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதை முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சரிடம் பதிவு செய்தார்.

மேலும், காரைக்கால் பகுதியில் ஓஎன்ஜிசி தலைமை அலுவலகம் மூலமாக நிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் காரைக்கால் மருத்துவமனையை விரிவுபடுத்தவும், காரைக்காலில் உள்ள பள்ளிக்கூடங்களை புனரமைப்பதற்கும் ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம்

தொடர்ந்து நேற்று ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கூட்டம் மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். பின்னர், வெங்கையாநாயுடுவை சந்தித்த நாராயணசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிரெஞ்சு அரசு நிதி ஆதரவு அளிப்பதால் புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதுதொடர்பான துறையை சார்ந்த உயர் அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் செயல் அதிகாரிகளை வரவழைத்து புதுச்சேரிக்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஒப்புதலை விரைந்து வழங்குமாறு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

மேலும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவை சந்தித்த முதல்வர் நாராயணசாமி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ. 109 கோடி வங்க வேண்டும் என்றும், சுதேஷி தர்சன் திட்டத்தின் கீழ் புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ. 120 கோடி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் இத்திட்டங்களுக்கான நிதியை புதுச்சேரிக்கு வழங்குவதாக உறுதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT