ஈரோட்டில் இருந்து மேட்டூர் நோக்கி அரசுப் பேருந்து நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. மேட்டூரை அடுத்த பெரும்பள்ளம் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது, அவ்வழியாக வேலூரில் இருந்து ‘கிரானைட் டைல்ஸ்’ சரக்குடன் வந்த லாரி வளைவில் திரும்பும்போது திடீரென பேருந்தின் மீது மோதியது.
இதில் பேருந்து ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்புறம் உள்ள பகுதி நசுங்கி சிதைந்தது. விபத்தில் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த முனியம்மாள்(42), கூலப்பாடியைச் சேர்ந்த ரஞ்சனி(30), மேட்டூரைச் சேர்ந்த பிரிசில்லா(42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், விபத்து நடந்த இடத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆண், ஒரு பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமரவேல்(40) மற்றும் பேருந்தில் வந்த பயணிகள், 2 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்ததை அறிந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மேட்டூர் துணை ஆட்சியர் மேகநாதரெட்டி, சேலம் எஸ்பி ராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். விபத்தில் காயமடைந்தவர்கள் மேட்டூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேட்டூர் போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.