தமிழகத்தில் அறநிலையத் துறைக் குச் சொந்தமான அனைத்து இந்து கோயில்களிலும் ஆடை கட்டுப் பாடு உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் 52 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அனைத்திலும் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கடந்த நவம்பரில் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ‘ஆண்கள் மேலாடை, வேஷ்டி, பைஜாமா, வழக்கமான பேன்ட், சட்டையும், பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதாரும், குழந்தைகள் முழுமையாக மூடப் பட்ட ஆடையும் அணிந்து வர வேண்டும். இந்த ஆடைகள் தவிர்த்து அரைக்கால் டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, கையில்லாத மேலாடைகள், இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் உள்ளிட்ட பிற ஆடைகள் அணிந்து வருவோரை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என நீதிபதி தெரிவித்திருந்தார்.
ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று மதுரை மீனாட்சி யம்மன் கோயில், திருப்பரங் குன்றம் முருகன் கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில், ராமநா தபுரம் ராமநாத சுவாமி கோயில் உட்பட அனைத்து கோயில்களி லும் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஆடை கட்டுப்பாடு உத்தரவு குறித்து ஏற்கெனவே தெரிந்திருந்ததால், ஏராளமான பக்தர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். பெரும்பாலான ஆண்கள் பட்டு வேஷ்டி, சட்டை, பெண்கள் சேலை, சுடிதார், தாவணி அணிந்து வந்தனர்.
பல கோயில்களில் ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட் அணிந்து வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்ட னர். சில கோயில்களில் ஜீன்ஸ் அணிந்து வந்த பக்தர்கள், அடுத்து வரும்போது இதுபோன்ற உடை அணிந்து கோயிலுக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். ஆடை கட்டுப்பாடு நடைமுறையை பக்தர்கள் வரவேற்றனர்.