பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 9 பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கும் நாளில் தனித்தனி குழுவாக சென்று கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையப்பர் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் தற்போது படிக்கும் கல்லூரி மாணவர்களுடன் முன்னாள் மாணவர்கள், அவர்களது நண்பர்கள் என ஏராளமானோர் உள்ளே நுழைந்து பச்சையப்பர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த கல்லூரி முதல்வர் காளிராஜ் மற்றும் பேராசிரியர்கள், தற்போதைய மாணவர்கள் தவிர மீதமுள்ள அனைவரும் வெளியேறும்படி அறிவுறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த சிலர், கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்தினர். அவரது கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதில் காயமடைந்த கல்லூரி முதல்வர் காளிராஜ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
10 பிரிவுகளில் வழக்கு
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 9 பேர் 18 வயதுக்கு உட்பட்ட வர்கள் என்பதால் அவர்கள் கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 22 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 31 பேர் மீதும் கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், கற்களை வீசுதல், அத்துமீறி நுழைதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உட்பட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.