தமிழகம்

தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் என்ன செய்திருக்கிறார் ரஜினி?- விவசாயிகள் சங்கம் கேள்வி

செய்திப்பிரிவு

தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் என்ன செய்திருக்கிறார்? என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நதிநீர் இணைப்புக்கு நான் ரூ.1 கோடி நன்கொடையாக தருகிறேன் அன்று ரஜினி அறிவித்தார். இதுவரை தரவில்லை. நதிகள் இணைப்பு திட்டத்தை அவரே முன்னின்று மக்களிடமும், மற்றவர்களிடமும் நிதி திரட்டி செய்திருக்கலாம். ஆனால் அதற்கு எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை.

பச்சை தமிழன் என்று கூறும் அவர், கர்நாடகாவுக்கு எதிராக காவிரியில் நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு திறந்துவிடாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால், நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது அவரை விட குறைந்த சம்பளம் பெறும் நடிகர்கள், விவசாயிகளுக்கு உதவினர். ஆனால் ரஜினி எதையும் செய்யவில்லை.

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது, அமைதி காத்த அவர், இப்போது சிஸ்டம் சரியில்லை என்பது நகைப்புக்குரியது. அவரது வருவாயில் இருந்து, தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதையும் செய்யவில்லை. இப்படிப்பட்டவர், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை எனக் கூற எந்த தகுதியும் இல்லை'' என இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT