சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் பயிற்சி
வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகளுக்கு கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த பயிற்சி வகுப்புகள் வழக்கமாக நடத்தப்படும்.
இந்த வகுப்பில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் நடைமுறை, மின்னணு வாக்குப்பதிவு இயநந்திரங்களைக் கையாளுதல், வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை போன்ற பல்வேறு பயிற்சிகளை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரி அளித்தார்.
தலைமைச் செயலாளர்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சென்னைக்கு வருவது அத்தனை எளிதான விஷயம் அல்ல. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின்போதுதான் இவ்வாறாக அனைத்து ஆட்சியர்களும் சென்னைக்கு ஒரே நேரத்தில் வருவார்கள். எனவே, இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல், சென்னைக்கு வந்திருக்கும் ஆட்சியர்களை சந்தித்து ஒரு கூட்டத்தை நடத்திவிட தமிழக அரசு திட்டமிட்டது.,
நவம்பரில் ஆட்சியர்கள் மாநாடு
இதைத் தொடர்ந்து, தேர்தல் பயிற்சிக்கு முதல் நாள் வந்த விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்களை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சந்தித்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும், பல்வேறு திட்டங்களின் நிலை குறித்தும், அவற்றின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று தேர்தல் பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகளையும் அவர் கோட்டைக்கு வரவழைத்து ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது. இது பற்றி தலைமைச் செயலக அதிகாரிகள் கூறுகையில், வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டுக்கு இது ஒரு முன்னோட்டமாக அமையும் என்றனர்.