முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், அவரது குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக, நவீன வரலாற்றுத் துறையில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
நான்காண்டுகள் கடும் முயற்சிக்குப் பின் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற முத்துக்கிருஷ்ணன், கல்வியிலும், எழுத்திலும் ஈடுபாடுள்ள மாணவராக இயங்கிவந்துள்ளார். தலித் விடுதலை அரசியலிலும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.
தன்னுடைய வலைப்பூவிலும், முகநூலிலும் தொடர்ந்து எழுதி வந்த முத்துக்கிருஷ்ணன், தனது கடைசிப் பதிவில் சமநீதி மறுக்கப்படுவதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். ''எம்.பில்/ஆராய்ச்சி படிப்புகளில் நுழைய, வைவாவின் போது சமநீதியில்லை. சமநீதி மறுப்புத்தான் இருக்கிறது'' என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
உயர்கல்வி நிலையங்களில் தலித்/பழங்குடி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே படித்துவருகின்றனர். ஆனால் அவர்கள் மத்தியில்தான் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது. இது பல்கலைக் கழகங்களில் நிலவும் சமூக ஒடுக்குமுறை குறித்த கவலையை அதிகரிக்கிறது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலையை ஒட்டி, உயர் கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பற்றி கவலையோடு விவாதிக்கப்பட்டது. ஆனால், பல்கலைக் கழகங்களில் நிலவும் சூழலை மாற்ற எதுவும் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
உயர்கல்வி நிலையங்களில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலை மேற்கொள்வோரை தண்டிக்கும் வகையில் 'ரோஹித் சட்டம்' இயற்றப்பட வேண்டும், மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வலியுறுத்தியிருந்தது. 'ரோஹித் சட்டம்' இயற்றப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம். உயர் கல்வி நிலையங்களில் சாதீய சூழலை மாற்றுவது உடனடி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும்.
தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டுமென குடும்பத்தார் கோரியுள்ளனர். நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், அவரது குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்'' என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.