‘தி இந்து’ செய்தி எதிரொலியாக தாம்பரத்தில் 22 ஆண்டுகளாக மூடிக்கிடந்த எம்.ஜி.ஆர் சிலை, அவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்டது.
சென்னை அடுத்த தாம்பரத்தில் சண்முகம் சாலை - ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலை கடந்த 1995-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தாம்பரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான மறைந்த எல்ல.ராஜமாணிக்கம் முயற்சியால் இந்த சிலை அமைக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கு காரணமாக சிலை திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது. பிறகு நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வந்தும் கோஷ்டிப் பூசல் காரண மாக சிலை திறக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அவரது சிலை திறக்கப்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள், ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இதுகுறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.
இந்நிலையில், தாம்பரம் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் சிலை வர்ணம் பூசி சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, நகர செயலாளர் கூத்தன் தலைமையில் நேற்று சிலை திறப்பு விழா நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் சிலையை எல்ல.ராஜமாணிக்கத்தின் மகனும், காஞ்சி கிழக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளருமான எல்.ஆர். செழியன் திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
பிறகு காஞ்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லப் பாக்கம் ச.ராஜேந்திரன் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி னார். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மகிழ்ந்து வரவேற்றனர்.