திறனறித் தேர்வுகள் தொடர்பான பிரச்சினையை மத்திய அரசு இந்தி பேசும் மாணவர்களின் கோணத்திலிருந்து மட்டும் பார்ப்பது மிகவும் ஆபத்தானதும் கவலையளிக்கும் போக்காகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "குடிமைப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திறனறித் தேர்வு ஒரு தரப்பினருக்கு மட்டும் சாதகமாக இருப்பதாகவும், இதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் இது குறித்து நேற்று விளக்கமளித்த மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், திறனறித் தேர்வில் ஆங்கில மொழித் திறன் வினாவுக்கான மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது என்றும், இதைத் தவிர வேறு எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
திறனறித் தேர்வு தொடர்பான சிக்கலில் மத்திய அரசு செய்யவுள்ள திருத்தம் யாருக்கும் பயன் தராது என்பது ஒருபுறமிருக்க, இப்பிரச்சினையே இந்தி பேசும் மாணவர்கள் சம்பந்தப்பட்டது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முயன்றிருப்பது வருத்தமளிக்கிறது.
திறனறித் தேர்வுகளில் ஆங்கில மொழித்திறனுக்கான மதிப்பெண் 20 மட்டும் தான். இது மொத்த மதிப்பெண்களில் வெறும் 5% மட்டுமே. மாணவர்களின் கோரிக்கைகளில் ஆங்கில மொழித்திறன் வினாவை நீக்க வேண்டும் என்பதும் ஒன்றே தவிர, அதுமட்டுமே மாணவர்களின் ஒற்றைக் கோரிக்கை அல்ல.
ஏற்கனவே, கடந்த கடந்த மாதம் 27 ஆம் தேதி இப்பிரச்சினை குறித்து நான் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தவாறு, திறனறித் தேர்வு முறை சமூக நீதிக்கும், இயற்கை நீதிக்கும் எதிராக உள்ளது என்பது தான் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களின் மையப்புள்ளி ஆகும்.
குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரிகளாக நியமிக்கப்பட இருப்பவர்கள் நிர்வாகப் பணிகளைத் தான் மேற்கொள்ளவிருக்கின்றனர். எனவே, குடிமைப்பணித் தேர்வு மாணவர்களின் நிர்வாகத்திறனை சோதிக்கும் வகையில் தான் அமைய வேண்டும். ஆனால், திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் மாணவர்களின் மேலாண்மைத் திறனை சோதிக்கும் வகையில் உள்ளன.
எனவே, நாட்டை நிர்வகிப்பதற்கான நிர்வாகத் திறனை சோதிக்காமல், அலுவலகங்களை மேலாண்மை செய்யும் மேலாண்மைத் திறனை சோதிக்கும் திறனறித் தேர்வுகள் பொருந்தாத ஒன்றாகும். அதுமட்டுமின்றி, இது அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற பாடங்களை படித்தோருக்கு சாதகமாகவும், கலை மற்றும் மானுடவியல் மாணவர்களுக்கு பாதகமாகவும் அமைந்திருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக திறனறித் தேர்வின் வடிவம் நகர்ப்புறங்களில் உள்ள படித்த, ஆங்கிலம் பேசும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு ஆதரவாகவும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. இதுபற்றி ஆய்வு செய்த வல்லுனர் குழுவும் இக்குற்றச்சாற்றை உறுதி செய்துள்ளது.
இத்தகைய சூழலில் திறனறித் தேர்வை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் மாற்றி அமைப்பது தான் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும். அத்துடன், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் நடத்தப்படும் குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வுகளை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும்.
ஆனால், அவற்றையெல்லாம் செய்யாமல், இந்தி பேசும் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றான மொழித்திறனை அறிவதற்கான வினாவை இந்தி மொழியிலும் வழங்க வேண்டும் என்பதை மட்டும் பரிசீலித்து, அந்த வினாவுக்கான மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது அரைகுறை தீர்வாகவே அமையும்.
மேலும், திறனறித் தேர்வுகள் தொடர்பான பிரச்சினையை இந்தி பேசும் மாணவர்களின் கோணத்திலிருந்து மட்டும் மத்திய அரசு பார்ப்பது மிகவும் ஆபத்தான, கவலையளிக்கும் போக்காகும். இதன் மூலம் இந்தி பேசும் மாணவர்களுக்கு அனைத்து வினாக்களையும் அவர்களின் தாய்மொழியில் கேட்கும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், மற்ற மொழி மாணவர்களுக்கு ஒரு வினாவைக் கூட அவர்களின் தாய்மொழியில் கேட்காது என்பது மொழி அடிப்படையில் செய்யப்படும் துரோகமாகும்.
எனவே, குடிமைப்பணி திறனறித் தேர்வுகளை அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்; இல்லாவிட்டால் திறனறித் தேர்வை அடியோடு ரத்து செய்ய வேண்டும். அத்துடன், குடிமைப்பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் (MAIN EXAM) எவ்வாறு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படுகிறதோ, அதேபோல், முதல் நிலைத் தேர்வையும் (PRELIMINARY EXAMINATION) தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்த வேண்டும். இந்த மாற்றங்கள் அனைத்தும் செய்யப்படும் வரை குடிமைப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.