சவுதியில் பல்வேறு கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள 22 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து 12 மீனவர்கள், கடலூர் மாவட்டத்தில் இருந்து ஒருவர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 3 பேர், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 6 பேர் என மொத்தம் 22 மீனவர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மீன் பிடிக்கும் நிறுவனத்துக்கு பணிக்கு சென்றுள்ளனர்.
அந்த நிறுவனத்தால் அவர்கள் பலவித கொடுமைக்கு ஆளாவதாக புகார்கள் வந்துள்ளன. பணி ஒப்பந்தத்துக்கு மாறாக பல்வேறு நிபந்தனைகள் விதித்து, உடல்ரீதியாகவும் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஒப்பந்தப்படி சரியான ஊதியம் கொடுக்காமல் மோசமாக நடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, சவுதியில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களுக்குச் சேரவேண்டிய ஊதியத்தை நிறுவனத்திடம் பெற்று, அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவர ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.
5 மீனவர் தூக்கு விவகாரம்
இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு மூலமும், சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கையை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து நேற்று முன்தினம் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.