தமிழகம்

கோவை: வேட்டை ஆயுதங்கள் எடுக்கும் ஆதிவாசிகள்?

கா.சு.வேலாயுதன்

அட்டப்பாடியில் நடக்கும் நில வெளியேற்ற விவகாரம், ஆதிவாசிகள்-விவசாயிகள் மோதலாக நிலங்களை கைப்பற்றல், கள்ளத் துப்பாக்கி புகார்களாக, அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க துவங்கிவிட்டன.

‘ஆதிவாசி நிலங்கள் அவர்களுக்கே’ என்ற சட்டப்படி, சுமார் 4,000 விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேறுமாறு, கேரள அரசு உத்தரவிட்டு, நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு, விவசாயி மல்லீஸ்வரன் வெளியூர் சென்றிருந்தபோது, ஆதிவாசியினர் அந்த இடத்தில் வலுக்கட்டாயமாக குடிபுகுந்து விட்டனர். அடுத்த நாள் வந்த, மல்லீஸ்வரன் குடும்பத்தையும் விரட்டி விட்டனர். காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், அவர்கள் வழக்குப் பதியவில்லை. அதனால், மல்லீஸ்வரனுக்கு ஆதரவாக, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர். அடுத்தநாள் இரவோடு, இரவாக மல்லீஸ்வரன் வீட்டில் குடியேறியிருந்த 8க்கும் மேற்பட்ட ஆதிவாசிகளை விரட்டப் பார்த்தனர்.

வீட்டில் குடியேறியிருக்கும் ஆதிவாசியிடம், துப்பாக்கி இருப்பதாகவும், அதைக்காட்டி சுட்டுவிடுவதாக எல்லோரையும் மிரட்டுவதாகவும், விவசாயி தரப்பில் புகார் தரப்பட்டது. இதில், அதிர்ந்து போன காவல்துறையினர், ஆதிவாசியைப் பிடித்து வந்து விசாரணையை துவக்கினர்.

இதற்கிடையில், மல்லீஸ்வரனை அவரது தோட்டத்திலேயே குடியமர்த்தினர். அவருக்குப் பாதுகாப்பாக, விவசாயிகள் காவல் காத்தும் வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது:

மல்லீஸ்வரன் கோவை மலுமிச்சம்பட்டியில் சொத்துகளை விற்று, இங்கு நிலம் வாங்கினார். இப்போது காலி செய்யுங்கள் என்றால் போக முடியுமா. நியாயம் கேட்டால் அதிகாரிகள், ‘வெளியே போ’ன்னு மட்டும் சொல்றாங்க. ஆதிவாசிகளிடம் கள்ளத்துப்பாக்கி உட்பட ஏற்கனவே வேட்டை ஆயுதங்கள் எல்லாம் உள்ளன. அதை வச்சு மிரட்டறாங்க.

எங்க புகாரை வாங்கி வச்சுட்டு விசாரிக்கறாங்களே தவிர, ஆயுதத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்வதில்லை. அதனால, குழு, குழுவாக ஒவ்வொரு தோட்டத்துக்கும் காவல் காப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT