தமிழகம்

நளினியின் விடுதலை புரியாத புதிர்! - மகளின் வருகைக்காகக் காத்திருக்கும் தந்தை உருக்கம்

அ.அருள்தாசன்

தண்டனை காலம் முடிந்த பின்னரும் சிறையில் இருக்கும் நளினியை விடுதலை செய்யாமல் இருப்பது புரியாத புதிராக இருப்பதாக அவரது தந்தை பி. சங்கரநாராயணன் வேதனையுடன் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடா நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்றவர் நளினி. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையால் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தற்போது நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன் தூக்கு தண்டனைக் கைதியாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ளார். ஆயுள் கைதியான நளினியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது.

இந்நிலையில், வேலூர் சிறை அதிகாரிகளிடம் நளினி கடந்த 12-ம் தேதி மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது தந்தையும் ஓய்வுபெற்ற காவல் துறை ஆய்வாளருமான பி.சங்கரநாராயணன் (வயது 77), வயதான நிலையில் படுத்த படுக்கையாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த அம்பலவாணபுரத்தில் இருக்கிறார். அவரை சந்திக்கவும், கடைசி காலத்தில் அவருடன் இருப்பதற்கு ஒரு மாதம் விடுப்பு (பரோல்) அளிக்கும்படி தமிழக சிறைத்துறை தலைவர் அனுமதி அளிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த மனு மீது சிறைத்துறை நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பின்னணியில் திரு நெல்வேலியிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள அம்பல வாணபுரத்தில் எண் 33, கடைசி தெருவிலுள்ள வீட்டில் படுக்கையில் இருந்த சங்கரநாராயணனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தோம்.

கண்ணில் தெரிந்த பாசம்

மகள் தொடர்ந்து சிறை வாசம் அனுபவித்து வருவது குறித்த வருத்தம் அவரது பேச்சில் இழையோடியது. ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் என்றாலும் ஒரு தந்தையாக, மகள் மீதான பாசம் இயல்பாகவே இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சங்கனாபுரம் என்ற இடத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சங்கரநாராயணன். சென்னையில் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி பின்னர் இன்ஸ்பெக்டராகி 37 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.

இவருக்கு மனோகரன், ரவி ஆகிய இருமகன்களும், சுகுணா, நளினி, அருணா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் மனோகரன் தந்தையுடனேயே இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளுக்குமுன் அம்பாசமுத்திரம் அருகே அம்பால வாணபுரத்துக்கு வந்து சொந்தமாக வீடுவாங்கி குடியேறி னார். அவரது மகள் சுகுணாவை அந்த இடத்தில் திருமணம் முடித்து கொடுத்து உள்ளதால் அமைதியான இந்த கிராமத்தை சங்கர நாராயணன் தேர்வு செய்திருக்கிறார். முதுமையாலும், உடல்நல குறைவாலும் வீட்டில் படுக்கையில் படுத்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியபோது ஒருசில விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டார்.

6 ஆண்டுகள் ஆகிறது

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் வேலூர் சிறையில் சென்று மகளை சந்தித்துவிட்டு இங்கு வந்திருக்கிறார். அதன்பின் அவரை சென்று பார்க்க இயலவில்லை. காரணம் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. பெரும்பாலும் படுத்த படுக்கையில் அவர் இருப்பதாக அவரது மகன் மனோகரன் தெரிவித்தார்.

உரக்கப் பேசினால் புரிந்து கொள்ளும் சங்கரநாராயணன், தனது மகள் நளினி விவகாரத்தில் ஏதோ வெறுத்து விட்டதுபோல் உணர்கிறார். போலீஸ் துறையில் பணியில் இருக்கும்போதும் யாரிடமும் சிபாரிசுக்கு செல்ல வில்லை. மகளை கைது செய்து, அவர் மீது நட வடிக்கைகள் எடுத்தபோதும் இது குறித்து எந்த அதிகாரியிடமும் பேசவில்லை. தப்பு செய்தால் தண்டனை என்று இருந்துவிட்டேன். இந்த வழக்கை சரிவர விசாரிக்காமல் ஏனோதானோ என்று முடித்துவிட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது. வழக்கு விசாரணையின்போது என்னிடம் விசாரணை அதிகாரிகள் விவரங்களை கேட்டார்கள். ஆனால் எனக்கு எதுவும் தெரியாததால், எதுவும் தெரியாது என்று கூறிஇருந்துவிட்டேன்.

மகளுக்கு நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக செய்தி வெளியானபோது அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. இப்போது அவரது தண்டனை காலம் முடிந்து விட்டது. அவரை இன்னும் விடு விக்காமல் இருக்கிறார். ஏன் அப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவரை விடுவிக்க வேண்டும் என்று அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ மனுக்கள் எதுவும் கொடுக்கவில்லை.

விடுதலை செய்ய வேண்டும்

என்னை பார்க்க பரோல் கேட்டு நளினி மனு செய்திருக்கிறார். பரோல் கொடுத்தாலும், கூடவே போலீஸ்காரர்களும் இருப்பார்கள்.அதைவிடுத்து அவரை சிறையி லிருந்து ஒரேயடியாக விடுதலை செய்துவிடலாம் என்று கண்ணீர் விடாத குறையாக அவர் பேசினார்.

அரசிடம் இதை தனது உருக்க மான வேண்டுகோளாக பத்திரிகை மூலம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.எனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினி பரோல் கேட்டிருப்பதால் உளவு பார்க்க வந்தீர்களா என்று தொடக்கத்தில் போலீஸ்காரர் நிலையில் விசாரித்தவர், பின்னர் மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தார். பல்வேறு காரணங்களுக்காக தொலைபேசியைகூட வைத்திருக்க வில்லை என்று தெரிவித்த அவர் நளினியின் வருகையை நோக்கி வழிமேல் விழிவைத்து காத்திருப்பதை உணரமுடிந்தது.

SCROLL FOR NEXT