மணல், செங்கல் விலை உயர்வால் அரசு கட்டுமானப் பணிகளை டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
அரசுத் துறைகளில் புதிய கட்டிடம் கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களில் பழுதுபார்ப்புப் பணியை மேற்கொள்வதற்குமான விலையை தமிழக பொதுப்பணித் துறைதான் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்கிறது.மத்திய அரசு வெளியிடும் விலைக் குறியீடுக்கு (பிரைஸ் இண்டெக்ஸ்) ஏற்ப ஒட்டுமொத்த கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கான வேறுபாட்டுத் தொகையை (எஸ்கலேசன் சார்ஜஸ்) மாநில அரசு வழங்கும். இதனால் லாபத்தில் மட்டும்தான் குறைவு ஏற்படும். ஆனால், இப்போது இதுவரை இல்லாத அளவுக்கு மணல் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் செங்கல், ஜல்லி, சிமென்ட், இரும்புக் கம்பிகளின் விலையும் உயர்ந்திருப்பதால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கான்கிரீட், செங்கல் கட்டுமானம், பூச்சு வேலை என எல்லாவற்றிற்கும் மணல்தான் பிரதானம். மணல் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதால், கட்டுமானச் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. 2013-2014-ம் ஆண்டுக்கான ஸ்டாண்டர்டு ஷெட்யூல் ஆப் ரேட்ஸ்-படி, ஒரு கனஅடி மணலுக்கு 3 ரூபாய் 14 பைசாவும், ஒரு செங்கலுக்கு 5 ரூபாய் 25 பைசாவும், ஒரு கனஅடி முக்கால் ஜல்லிக்கு 29 ரூபாயும் 54 பைசாவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால், இப்போது ஒரு கனஅடி மணல் ரூ.80 முதல் 100 வரைக்கும், ஒரு செங்கல் ரூ.7 முதல் ரூ. 9 வரைக்கும், ஒரு கனஅடி ஜல்லி ரூ.40-க்கும் விற்கப்படுகிறது. சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டது.
வீட்டு வசதி வாரியத்தில் மட்டும் ரூ.500 கோடி மதிப்புள்ள புதிய கட்டுமானப் பணிகளை டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்கள் தயங்குகின்றனர். தற்போது நடைபெற்று வரும் ரூ.1,000 கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகளின் தரம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மற்ற துறைகளிலும் இதே நிலைதான் என்றார் அவர்.
சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறுகையில், “கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. 3 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மணல் விலை உயர்வுக்கு முன்பு ஒரு சதுரஅடி கட்டுவதற்கு ரூ.1,450 செலவானது. இப்போது ரூ.1,850 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவாகிறது. மணல் விலை உயர்வால், கருங்கல் தூளை மணலுக்கு மாற்றாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கட்டிடங்களின் ஆயுள் குறையும்” என்றார்.