தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: கடலோர பகுதிகளில் கன மழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று காலை மேலும் வலுபெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த மற்றொரு தாழ்வு நிலை தற்போது உருவாகி உள்ள தாழ்வு பகுதியுடன் இணைந்துவிட்டது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது. அவ்வாறு மாறிய பின்பு அது எந்த திசையில் செல்கிறது என்பதனை பொருத்து வரும் நாட்களில் தமிழகத்துக்கான மழை வாய்ப்பு பற்றி தெரிவிக்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைவாசிகள் அவதி

சென்னையில் இன்று காலை பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

சிறிய தெருக்கள், சந்துகளில் சற்று உயர்த்தி சாலை போடப்பட்டுள்ளதால் வீடுகளின் முன்பகுதியில் மழைநீர் பெருமளவு தேங்கியுள்ளது. ஏற்கனவே தேங்கியிருந்த இடங்களில் மழைநீர் கழிவுநீராகிவிட்டது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT