நாடோடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் அதிக அளவில் பயிலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 11 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆண்டு விழாவை, நடப்பாண்டில் நடத்திக்காட்டி மாணவ, மாணவிகள், பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் ஆசிரியர்கள்.
மதுரை சக்கிமங்கலம் லெட்சுமி காந்தன் பாரதி நகரில் அமைந்துள்ளது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 400 பேர் படிக்கின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர் நாடோடி (சாட்டையடி, பூம் பூம் மாட்டுக்காரர்கள், குடு குடுப்பைக்காரர்கள், குறி சொல்பவர்கள்) குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள். தமிழகத்திலேயே நாடோடி சமூகத்தினரின் குழந்தைகள் அதிக அளவில் பயிலும் பள்ளி இது தான். இப்பள்ளியில் கடைசியாக கடந்த 2005-ல்தான் ஆண்டு விழா நடைபெற்றது. அதன்பிறகு நன்கொடையாளர்கள் முன் வராதது, ஆசிரியர்கள், பெற்றோர் கள் ஆர்வம் காட்டாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டு விழா நடைபெறவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக ஆண்டு விழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு எப்படியாவது ஆண்டு விழாவை நடத்திவிட வேண்டும் என பெரு முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் இப்பள்ளி ஆசிரியர்கள்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. தலைமை ஆசிரியை நா.சாந்தி காளீஸ்வரி தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.அழகுமீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.பகுருதின், டி.கவுரி தங்கவேல், எஸ்.மரியதாஸ், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் யாசின் சமிம், ஆசிரியர்கள் டி.யூ.ராஜவடிவேல், வே.அருவகம், கி.சித்ரா உள்ளிட்டோர் பேசினர்.
ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கா மல் பள்ளிக்கு வந்தவர்கள், படிப் பில் சிறந்தவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு விருது கள் வழங்கப்பட்டன. கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆண்டு விழா நடைபெற முயற்சி எடுத்த ஆசிரியர்களை கல்வித் துறை அதிகாரிகள், குழந்தை களின் பெற்றோர்கள் பாராட்டி னர். இவ்விழா ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.