மத்திய அரசு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி, அதனை சட்ட வடிவமாக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நம் நாட்டில் மகளிருக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக முதன் முறையாக 1996-ம் ஆண்டு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, 1997-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மகளிர் மசோதா நிறைவேற்றப்படாமல் மசோதாவை தாக்கல் செய்வதும், விவாதம் செய்வதும் நடைபெற்று வந்தது. குறிப்பாக 2008-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா, பிறகு 2010-ல் மாநிலங்களவையில் நிறைவேறியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதாவது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு மற்றும் நம் நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் குறைந்தது 15 மாநிலங்களின் சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்படும்போது மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். இவ்வாறு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றுவதற்கு மகளிருக்கு வாய்ப்புகள் உள்ளது.
மகளிர் குடும்பத்தில் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் பெரும் பங்கு வகித்து அக்கறையுடன் செயல்படுவதற்கு இட ஒதுக்கீடு வழி வகை செய்வதால் மகளிர் தங்கள் நலன் மட்டும் பேணாமல் குடும்ப முன்னேற்றம், பொது மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றிற்கும் உறுதுணையாக விளங்குவார்கள். மேலும் நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் மகளிர் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, சிறப்பாக பணியாற்றி தாங்கள் சார்ந்த துறைகளை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் போது ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்ற நிலை ஏற்படும்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறி சட்டமாக்கப்பட வேண்டும். அதன் மூலம் மகளிர் அரசியல் வாழ்விலும் தங்களை முழுமையாக இணைத்துக்கொண்டு பெண் உரிமை காக்கவும், சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்புடன் வாழவும், முன்னேற்றம் காணவும், பொருளாதாரத்தில் மேம்படவும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவார்கள்.
1996 ஆம் ஆண்டில் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா குறித்து ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
எனவே மத்திய பாஜக அரசு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று நடைபெறுகின்ற நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் அல்லது அடுத்து வர இருக்கின்ற நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும், அதனை சட்ட வடிவமாக்க வேண்டும், அதன் மூலம் மகளிர் நலன் மேம்பட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.