வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம்பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகியான ஜவாஹிருல்லா உள்ளி்ட்ட 5 பேரும் சரணடைய ஒருவாரம் விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
கடந்த 1997-2000ம் காலகட்டத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்அனுமதி பெறாமல், வெளிநாடுகளில் இருந்து ரூ. 1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 ஐ சட்டவிரோதமாகப் பெற்றதாக தமுமுக நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகிய 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலிக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்லமுகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து, அனைவருக்கும் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்தது.
இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய காலஅவகாசம் வழங்கவும், மேல்முறையீட்டு காலம் வரை தங்களுக்கு ஜாமீன் வழங்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் சரணடைய வரும் 28-ம் தேதி வரை விலக்கு அளித்து, அதுவரை அவர்களை போலீஸார் கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.