ஊடகங்களில் வரும் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அதுபற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பாக அவர் பேசிய தாவது:
கடந்த 14-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பிரச்சினையை எழுப்ப அனுமதி கோரினர். இந்தப் பிரச்சினை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரே வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றத் தில் உள்ள பிரச்சினை குறித்து விவாதிக்கக் கூடாது என ஏற்கெனவே தீர்ப்பளித்திருந் தேன்.
கடந்த 15-ம் தேதியும் இப்பிரச் சினையை எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பினார். ஏற்கெனவே அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்தேன். கடந்த 16-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர், தன் கையில் ஆதாரம் இருக்கிறது எனக் கூறி மீண்டும் அதே பிரச்சினையை எழுப்பினார். மரபின்படி ஆதா ரத்தை பேரவைத் தலைவரின் அறையில் கொடுக்க வேண்டும் எனக் கூறினேன்.
அதன்படி, திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி என்னிடம் ஒரு குறுந் தகட்டை கொடுத்தார். அதை பார்த்தேன். ஓர் ஆங்கில தொலைக் காட்சியில் வெளிவந்ததை பதிவு செய்து ஆதாரமாகக் கொடுத்துள்ள னர். ஊடகச் செய்தியை ஆதார மாகக் கொண்டு விவாதம் நடைபெறக் கூடாது என ஏற் கெனவே தீர்ப்பளித்து விட்டேன்.
1998 மார்ச் 20-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய அன்றைய முதல்வர் கருணாநிதி, ‘‘பத்திரிகைகளில் வரும் ஹேசியங்களை வைத்து நாம் இங்கே விவாதம் செய்வது அழகல்ல’’ என்று குறிப்பிட்டதை மீண்டும் பதிவு செய்கிறேன். அதுபோல 2010 நவம்பர் 10-ம் தேதி இதே அவையில் உரை யாற்றிய அன்றைய பேரவை முன்னவர் க.அன்பழகன், ‘‘ஒரு செய்தி தன்னுடைய காதுக்கு வந்தால்கூட அது குற்றச்சாட்டாக வடிவம் எடுத்தால் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்டு அறிந்த பிறகுதான் பேரவையில் சொல்ல வேண்டும். வெளியில் எத்தனையோ செய்திகள் வரலாம். அவற்றையெல்லாம் பதிவு செய்ய இது பதிவுத் துறை அலு வலகம் அல்ல’’ என்று குறிப் பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே. தொலைக்காட்சியிலோ, பத்திரிகைகளிலோ ஒரு செய்தி வந்துள்ளது என்பதை மாத்திரம் வைத்துக்கொண்டு பேரவையில் விவாதிப்பது சரியாக இருக்காது. குறுந்தகட்டில் பேட்டியளித்ததாக கூறப்படும் உறுப்பினர்களே அதை மறுத்துள்ளனர். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் அளித்த குறுந்தகடு செய்தியை ஆதாரமாகக் கொண்டு அந்தப் பிரச்சினையை பேரவையில் விவாதிக்க இயலாது என தீர்ப்பளிக்கிறேன். தயவு செய்து உறுப்பினர்கள் யாரும் இது சம்பந்தமாக பேச வேண்டாம்.
இவ்வாறு பேரவைத் தலைவர் பி.தனபால் கூறினார்.