தமிழகம்

திண்டுக்கல்லில் அதிமுகவினரின் பேனர் கிழிப்பு; போலீஸ் தடியடி

செய்திப்பிரிவு

திண்டுக்கல் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆஜராக வந்தபோது, அதிமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை திமுகவினர் கிழித்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதால் பதற்றம் உருவானது.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆஜரானார். அவரை வரவேற்று திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். கடந்த 22ம் தேதி அதிமுக நகர செயலர் பாரதி முருகன் தலைமையில், அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து நீதிமன்றம் முன் திமுகவினர் வைத்த ஸ்டாலினின் பிளக்ஸ் பேனரைக் கிழித்தனர். இதைத் தடுத்த திமுக வழக்கறிஞர்களை உருட்டுக்கட்டைகளால் தாக்கினர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.

அதனால், மு.க.ஸ்டாலின் நீதி மன்றத்தில் ஆஜராவதையொட்டி மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க மாவட்டக் கண்காணிப்பாளர்கள் ஜெயச்சந்திரன் (திண்டுக்கல்), மகேஷ் (தேனி) ஆகியோர் தலைமையில், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நீதிமன்றம் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீஸார், திமுகவினரை நீதிமன்றப் பகுதியில் வர விடாமல் தடுத்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் திமுகவினர் நீதிமன்றப் பகுதிக்கு வருவதைத் தடுக்க புறநகர் பகுதியிலே போலீஸார் அவர்களை திண்டுக்கல்லுக்கு வரவிடாமல் திருப்பி அனுப்பினர். அதையும் மீறி திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.

இதற்கிடையே மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை காலை ஆஜரானார். பின்னர் 11.05 மணிக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற மறுநொடியே, நீதிமன்றம் முன், ஸ்டாலினைக் கண்டித்து அதிமுகவினர் வைத்திருந்த இரு பிளக்ஸ் பேனர்கள் மீது திமுகவினர் கற்களை வீசி சேதப்படுத்தினர்.

அதனால் திமுகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். நாலாபுறமும் அவர்கள் சிதறி ஓடியதால் நீதிமன்றம் முன் பதற்றம் நிலவியது.

SCROLL FOR NEXT