தமிழகம்

‘ஒற்றுமையாக இருந்து ஜெயிக்கப் பாருங்கப்பா!’ மதுரை தி.மு.க.வினருக்கு கருணாநிதி உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வ.வேலுச்சாமி, செவ்வாய்க்கிழமை காலையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவருடன் மதுரை மாவட்ட செயலர் பி.மூர்த்தி, மாநகர் பொறுப்புக் குழுத் தலைவர் கோ.தளபதி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மா.ஜெயராம், குழந்தைவேலு, சின்னம்மாள் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

அப்போது, வேட்பாளர் வ.வேலுச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த கருணாநிதி, கட்சியினரை அருகில் அழைத்து, எல்லாம் ஒற்றுமையா இருந்து ஜெயிக்கப் பாருங்கப்பா” என்று கூறியுள்ளார். கண்டிப்பாக ஜெயித்துவிட்டு வந்து, உங்களிடம் வாழ்த்துப் பெறுவோம் அய்யா” என்று கூறி உற்சாகமாகக் கிளம்பி உள்ளனர் தி.மு.க.வினர்.

இதேபோல் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பொன். முத்துராமலிங்கமும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவருடன், தேனி மாவட்டச் செயலர் மூக்கையா, மதுரை மாவட்டச் செயலர் பி.மூர்த்தி, பொறுப்புக் குழுத் தலைவர் கோ.தளபதி, கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் போடி லட்சுமணன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணிப்பு

வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், திங்கள்கிழமை மதுரை கே.கே.நகரில் உள்ள வ.வேலுச்சாமியின் வீட்டில் கட்சியினரின் கூட்டம் அலைமோதியது. ஆனால், தீவிர அழகிரி ஆதரவாளர்களான பி.எம்.மன்னன் உள்ளிட்டவர்கள் மட்டும் வாழ்த்துச் சொல்ல வரவில்லை.

SCROLL FOR NEXT