தமிழகம்

ஜெயங்கொண்டம் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் பலி; 10 பேர் காயம்

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 25 பேர், துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடி கிராமத்துக்குச் சென்றுவிட்டு, நேற்று இரவு சரக்கு ஆட்டோவில் கச்சிப்பெருமாள் கிராமத்துக்குப் புறப்பட்டனர்.

கச்சிப்பெருமாள் அருகே வந்தபோது, திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் எதிரே வந்த சிமென்ட் பவுடர் ஏற்றிய லாரி, சரக்கு ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த ராஜகுமாரி(55), காசியம்மாள்(45), செல்வி, சரஸ்வதி(50), செந்தாமரை(50), சித்ரா(30), ராணி(40), மருதுபாண்டி(32), முனியம்மாள்(60), மணிகண்டன்(25), காமாட்சி(45) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் பலத்த காயமடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்த உடையார்பாளையம் போலீஸார் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து காரணமாக திருச்சி-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம், அரியலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT