தமிழகம்

தாம்பரம்-மதுரவாயல் சாலையில் பஸ் கவிழ்ந்தது: ஒருவர் பலி, 10 பேர் காயம்

செய்திப்பிரிவு

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 25 பயணிகளுடன் கள்ளக்குறிச்சி நோக்கி தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கண்ணன்(40) என்பவர் ஓட்டினார். நடத்துநராக சீனிவாசன் இருந்தார்.

பரணிபுத்தூர் அடுத்த மவுலிவாக் கத்தை கடந்தபோது, முன்னால் சென்ற லாரியில் திடீரென பிரேக் போடப்பட்ட தால், கண்ணனும் பிரேக் போட்டுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் கம்பிகளை உடைத்து கொண்டு சாலையின் நடுவே சென்ற பேருந்து, தாம்பரத்தில் இருந்து போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபர் மீது மோதியது. இதில், போரூரை சேர்ந்த பாலமுருகன்(35) என்பவர் உயிரிழந்தார்.

அங்கிருந்து சர்வீஸ் மழைநீர் கால்வாயில் பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தின் பின் சக்கரம் அந்தரத்தில் தூக்கியபடி நின்றது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், அக்கம் பக்கத்தினரும், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாரும் பயணிகளை மீட்டனர். காயமடைந்தவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை, சென்னை அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 10 காயமடைந்தனர்.

பெண் பலி

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் பொன்னுவேல். இவரது மகள் சசிகலாகுமாரி(35). இருவரும், இருசக்கர வாகனத்தில் வேலூர் நோக்கி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி, சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், தலையில் காயமடைந்து சசிகலாகுமாரி சம்பவ இடத்திலேயே பலியானார். காஞ்சி தாலுகா போலீஸார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT