தமிழகம்

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,000 ஆக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஆதரவு விலையாக 60 ரூபாய் மட்டும் தற்போது உயர்த்தியிருப்பது போதுமானதல்ல. நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 என அறிவிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விவசாயம் தான் மிகவும் இன்றியமையாத தொழில். இத்தொழிலை பாதுகாத்திடவும், வளர்ச்சிப் பெறச் செய்திடவும், மேம்படுத்திடவும் தேவையான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டியது அரசின் கடமையாகும்.

கடந்த பல வருடங்களாக நம் நாட்டில் விவசாயத் தொழில் நலிவடைந்து வருகிறது. காரணம் கடும் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, இயற்கைச் சீற்றம், கனமழை, வெள்ளம், உரிய காலத்தில் இடு பொருட்கள் கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் விளைநிலங்களில் விளையும் விளைப்பொருட்கள் பாதிக்கப்படுகின்றன.

இதனால் வேளாண் தொழிலை செய்யும் சிறு, குறு விவசாயிகள் உட்பட இத்தொழிலை நம்பி இருக்கின்றவர்கள் எல்லோரும் நலிவடைந்து போகின்றனர். எனவே அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வேளாண் தொழிலை வளம்பெறச் செய்ய வேண்டும். அதற்காக விவசாயத் தொழிலுக்கு பல்வேறு சலுகைகளையும், இலவசங்களையும் வழங்கி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.

குறிப்பாக விவசாயம் பாதிக்கப்படிருக்கும் இச்சூழலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு தொடர்ந்து வட்டியில்லா கடனைக் கொடுக்க முன்வர வேண்டும். தற்போது மத்திய அரசின் பொருளாதாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் 2016 - 17 ஆம் ஆண்டிற்கு நெல்லுக்கான ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு 60 ரூபாய் மட்டும் உயர்த்தி வழங்க அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவானதாகும்.

ஏற்கெனவே ஒரு குவிண்டால் நெல்லின் விலை ரூ. 1410, தற்போது அறிவித்திருக்கும் ஆதரவு விலையோடு சேர்த்தால் அதன் விலை ரூ.1470. இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகம் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,640 என அறிவித்தது.

எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 4,000 வழங்க வேண்டும். ஆனால் விவசாயிகள் சங்கம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்சம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க கோரிக்கை வைக்கின்றனர். எனவே, மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000 என அறிவிக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டும்'' என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT