குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் இன்று நடக்கும் விழாவில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விருது களை வழங்குகிறார். குடியரசு தின விழாவில் முதல்வர் கொடியேற்றுவது தமிழகத்தில் இதுவே முதல்முறை யாகும்.
இந்தியாவின் 68-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகில் இன்று காலை கோலாகல விழா நடக்கிறது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
வழக்கமாக, சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதல்வரும் குடியரசு தின விழாவில் மெரினா கடற்கரையில் ஆளுநரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வர். விருதுகளையும் பதக்கங் களையும் முதல்வர் வழங்குவார்.
ஆனால், தற்போது தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற் கிறார். எனவே, தமிழகத்தில் முதல் முறையாக குடியரசு தினத்தில் முதல்வர் கொடியேற்றுகிறார். அந்த வாய்ப்பு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்துள் ளது.
காலை 7 மணிக்கு போர் நினைவுச் சின்னம் செல்லும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அங்கு மலர்வளையம் வைத்து, மறைந்த முப்படை வீரர் களுக்கு மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து, 8 மணிக்கு காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். மத்திய, மாநில காவல் படைகள், கடலோர காவல் குழுமம், தமிழக கமாண்டோ படை, சிறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, தேசிய மாணவர் படைகளின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்கிறார்.
பின்னர், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், விவசாயத்தில் சிறப்பாக செயல் பட்டவருக்கான விருது, மதுவிலக்கு அமல் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட வருக்கான உத்தமர் காந்தியடிகள் பதக்கம் ஆகியவற்றை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குகிறார்.
அதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, வெளி மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தமிழக அரசுத் துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் இதில் இடம் பெறும். விழாவில் தமிழக அமைச்சர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
குடியரசு தின விழாவுக்காக காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு எதிரில், காந்தி சிலை அருகே பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களாக விழாவுக்கான ஒத்திகைகள் நடந்து வந்தன. நேற்று காலை, இறுதிகட்ட ஒத்திகை நடந்தது. இதில், கொடியேற்றுதல், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற நிகழ்ச்சிகள், முதல்வருக்கு பதில் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொண்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.
இதையொட்டி காமராஜர் சாலை யில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப் படவில்லை. ஏற்கெனவே ஜல்லிக் கட்டு போராட்டங்களால் காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப் பட்டிருந்து. இந்நிலையில், குடியரசு தின நிகழ்ச்சிகள் முடியும் வரை போக்குவரத்து மாற்றம் தொடரும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு, காமராஜர் சாலையில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வராக 2-வது முறை
முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் 2-வது குடியரசு தின விழா இதுவாகும். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர் ரோசய்யா கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனை காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்திருந்தார். அவருக்கு பதில் முதல்வராக பதவியேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.