தமிழகம்

மேயர் சைதை துரைசாமிக்கு நெருக்கடி எதுவும் இல்லை: மேயர் அலுவலக வட்டாரங்கள் தகவல்

செய்திப்பிரிவு

மேயர் சைதை துரைசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டதாக பரவிய வதந்தியில் உண்மையில்லை என்று மேயர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை மாநகராட்சி பணிகளில் அதிருப்தி காரணமாக மேயர் சைதை துரைசாமியை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது என்று மாமன்ற உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமையிடம் ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மேயர் சைதை துரைசாமியை பதவி விலகுமாறு அறிவுறுத்தியதாகவும், இந்த பரபரப்பான சூழலில் துணை மேயர் பெஞ்சமினை கடந்த சனிக்கிழமையன்று போயஸ் தோட்டத்துக்கு ஜெயலலிதா அழைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால் மாநகராட்சி வட்டாரங்களில் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. நெருக்கடி காரணமாக மேயர் சைதை துரைசாமி ராஜிநாமா செய்துவிட்டதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், மேயர் சைதை துரைசாமி நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்துக்கு வழக்கம்போல் வந்து, அவரது அலுவல் அறையில் அமர்ந்து அன்றாட பணிகளை மேற்கொண்டார். பல்வேறு கோப்புகளில் கையெழுத் திட்டார். மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.

அவர் தொடர்பாக வெளியில் பரவி வரும் தகவல் குறித்து அவரிடம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பின்னர் மேயர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது, மேயர் தொடர்பாக பரவி வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி. அதில் துளியும் உண்மையில்லை என்றனர்.

மாமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் கேட்டபோது, கட்சி தலைமையிடத்தில் இருந்து, மேயரை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காதீர் என்று எந்த ரகசிய உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. அவ்வாறு பரவி வரும் வதந்தியில் உண்மையில்லை என்றனர்.

SCROLL FOR NEXT