தமிழகம்

தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் கனிமொழி கண்ணெதிரில் மோதிய திமுக-வினர்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. வில் மாவட்ட செயலர் என். பெரியசாமிக்கும், திருச்செந்தூர் தொகுதி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கும் இடையே நீண்ட காலமாகவே பனிப்போர் இருந்து வருகிறது. மக்களவை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து இந்த பனிப்போர் தற்போது தீவிரமடைய தொடங்கி யுள்ளது.

இருவரும் மக்கள் பிரச்சினை களை முன்னிறுத்தி போட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை இருவரும் தனித்தனியாக போராட்டங்களை அறிவித்துள்ளனர். சடையநேரி கால்வாய் பிரச்சினையை வலியுறுத்தி மெஞ்ஞானபுரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவைகுண்டம் அணையை தூர்வார வலியுறுத்தி பெரியசாமி தலைமையில் திருவை குண்டத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் நடைபெறும் இந்த போட்டி போராட்டங்களால் தி.மு.க. தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக தி இந்து நாளிதழில் சனிக்கிழமை விரிவான செய்தி வெளிவந்தது.

தி.மு.க. பொதுக்கூட்டம்

இந்நிலையில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் என். பெரியசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

திரும்பி சென்றார் அனிதா

பொதுக்கூட்ட மேடைக்கு கனிமொழி வருவதற்கு முன்பாக அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அனிதாவும், அவரது ஆதரவாளரான மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பில்லா ஜெகனும் மேடையில் ஏறுவதற்காகச் சென்றனர். அப்போது பில்லா ஜெகன் மேடையில் ஏற எதிர்ப்பு தெரிவித்து பெரியசாமியின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து அனிதாவின் ஆதரவாளர்களும் எதிர் கோஷம் போட்டனர். மேலும், பில்லா ஜெகனை மேடையில் ஏறவிடாமல் பெரியசாமியின் ஆதரவாளர்கள் தடுத்தனர். இதனால், மேடையில் இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மேடை ஏறிய அனிதா திடீரென கீழே இறங்கி திரும்பி சென்றுவிட்டார். அவரது ஆதரவாளர்களும் அவருடன் சென்றுவிட்டனர்.

கனிமொழி முன் மோதல்

இந்நிலையில், கனிமொழி மேடைக்கு வந்ததும் அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவா ளர்களுடன் மீண்டும் அங்கு வந்தார். அப்போதும் பில்லா ஜெகன் மேடையில் ஏற எதிர்ப்பு தெரிவித்து பெரியசாமியின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். கனிமொழி முன்னிலையிலேயே இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

இதனை கண்ட கனிமொழி, `இது தலைவர் கருணாநிதி அறிவித்தபடி நடக்கும் கூட்டம். இதில் யாரும் எந்தப் பிரச்சினை யும் செய்யக்கூடாது' எனக் கண்டித்தார். இதையடுத்து கூட்டம் அமைதியானது. அனிதா ராதாகிருஷ்ணன் மட்டும் மேடை ஏறி அமர்ந்தார். பில்லா ஜெகனை கடைசி வரை பெரியசாமியின் ஆதரவாளர்கள் மேடை ஏற அனுமதிக்கவில்லை. தொடர்ந்து, நடந்த சம்பவங்கள் குறித்து கனிமொழியிடம் அனிதா ராதா கிருஷ்ணன் புகார் செய்தார்.

இந்த மோதல் மூலம் பெரிய சாமி-அனிதா பனிப்போர், கனி மொழி முன்னிலையிலேயே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை உணர்ந்த கனிமொழி தான் பேசும்போது, கட்சியினர் ஒற்றுமையாக இருந்தால் தான் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்றார்.

SCROLL FOR NEXT