தமிழகம்

வேகம் எடுக்கும் மோனோ ரயில் திட்டம் - தி இந்து செய்தி எதிரொலி

எஸ்.சசிதரன்

மோனோ ரயில் திட்டம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை கூடியது. இந்த கூட்டம் பல மாதங்களாக கூட்டப்படாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி, கடந்த சனிக்கிழமையன்று விரிவான செய்தியை "தி இந்து" வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னைவாசிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மோனோ ரயில் திட்டம், அறிவிக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளாகியும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் நீண்டுகொண்டு செல்வதால், லட்சக்கணக்கான புறநகர் மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்துக்காக, கடந்த 2012 ஜனவரியில் டெண்டர் கோரப்பட்டது. அதில் முதல் கட்டத்தைத் தாண்டி, இறுதிக்கட்டத்தை, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு இரு நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் எட்டின. அந்த நிறுவனங்களுக்கு RFP (Request for proposal)) எனப்படும் 900 பக்கங்களைக் கொண்ட "பரிசீலனைக்கு உகந்தமைக்கான வேண்டுகோள்" வழங்கப்பட்டது. அதைப் பார்த்து அவர்கள் டெண்டரின் இறுதிக்கட்டமான, நிதி தொடர்பான விவரங்களை அரசுக்கு மீண்டும் மனு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக அந்நிறுவனங்கள் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தன. அதற்கு விளக்கம் அளிப்பதற்கு, தலைமைச் செயலாளர் தலைமையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழு கூடி சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அது பல மாதங்கள் நடைபெறாமல் இருந்தது. முதல்வரின் கனவுத் திட்டமாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், இரண்டு ஆண்டுகள் கடந்தபின்பும், டெண்டர் கட்டத்தைத் தாண்டாத நிலையில் இருந்துவந்தது. இதை அந்த செய்தியில் "தி இந்து" சுட்டிக் காட்டியிருந்தது.

முதல்வர் தலையீடு

இது முதல்வரின் கவனத்துக்குச் சென்றது. மோனோ ரயில் பணிகளை உடனடியாக துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. இதைத் தொடர்ந்து, சென்னைத் தலைமைச் செயலகத்தில் அதிகாரமளிக்கப்பட்ட குழுக் கூட்டம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை கூடியது. அந்த கூட்டத்தில், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டிசம்பரில் டெண்டர் இறுதி

இது தொடர்பாக ஒரு உயர் அதிகாரி "தி இந்து" நிருபரிடம் கூறியதாவது:-

இந்த அதிகாரிமளிக்கப்பட்ட குழு கூடி, டெண்டருக்குத் தேர்வாகியுள்ள நிறுவனங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது பற்றி விவாதித்தது. இது குறித்து, அந்நிறுவனங்களுக்கு விரைவில் தகவல் அளிக்கப்படும். வரும் நவம்பர் மாதத்தில் அவர்கள் திட்டத்துக்கான நிதித் தொகை பற்றிய டெண்டரை சமர்ப்பிப்பார்கள். அதன்பிறகு, டிசம்பர் மாதத்தில் டெண்டர் இறுதி செய்யப்படும் என்றார்.

SCROLL FOR NEXT