தமிழக வறட்சி பாதிப்பு குறித்து ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என மதுரை மாவட்டத்தில் பார்வையிட்ட மத்தியக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவு கிறது. ஏராளமான விவசாயிகள் இறந்துள்ளனர். அனைத்து மாவட் டங்களையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதற்காக பிரதமர் மோடியிடம் ரூ.39,565 கோடி நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து தமிழகத்தின் வறட்சியை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை தந்துள்ளது.
மதுரை மாவட்ட வறட்சியை ஆய்வு செய்ய நேற்று வந்த குழுவில் மத்திய வேளாண்துறை இயக்குநர் விஜய் ராஜ்மோகன், மத்திய குடிநீர் விநியோக ஆலோசகர் சந்தோஷ் ஆகியோர் அலப்பலச்சேரி, பூசலப்புரம், குப்பல்நத்தம் ஆகிய கிராமங்களில் மழையின்றி வாடிப்போன மக்காச்சோளம், சாவியாகிப்போன நெற்பயிரை பார்வையிட்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் தீரஜ்குமார், மதுரை ஆட்சியர் கொ.வீரராகவராவ் ஆகியோர் உடன் சென்றனர்.
மத்திய குழுவிடம் விவசாயிகள் கூறியது: 20 ஆண்டுகளுக்குப் பின் கடும் வறட்சியில் சிக்கி தவிக்கிறோம். மழை பெய்திருந்தால், ஒரு ஏக்கருக்கு 20 டன் மக்காச்சோளம், 25 மூடை நெல் விளையும். தற்போது பயிர் வாடி கருகிப்போனதால், கால் நடைகளுக்குக்கூட தீவனம் இல்லாமல் போய்விட்டது. நிலத் தடி நீர் மட்டம் 400 அடிவரை சென்றுவிட்டது. குடிநீரும் போதிய அளவு வழங்கவில்லை. வறட் சியை சமாளிக்க முடியாமல் தவிக் கிறோம். கூலி வேலையும் கிடை யாது எனக்கூறி கண்ணீர் விட்டனர்.
ஆய்வுக்குப்பின் மத்திய அதிகாரிகள் கூறியது: பயிர்களை பார்க்கும்போதே எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மாவட்டம் முழுவதிலும் 80 முதல் 100 சதவீதம்வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித் துள்ளனர். பாதிப்புகள் குறித்து முழுமையாக கணக்கிட்டு, ஒருவாரத்திற்குள் மத்திய அரசிடம் அறிக்கை அளிப்போம் என்றனர்.
வறட்சி குறித்து பார்வையிட வந்த மத்திய குழு அதிகாரிகளிடம் மதுரை மாவட்டம் அலப்பலச்சேரி கிராமத்தில் மழையில்லாமல் வாடிப்போன மக்காச்சோள பயிரை காட்டும் விவசாயிகள்.