தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. இதில், தங்களுக்கு பயன்படும்படியான அறிவிப்புகள் வெளிவருமா என்று பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அதிமுக அரசு பொறுப்பேற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வரிகளற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், விவசாயம், கால்நடை மற்றும் கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் கவர்ச்சிகரமான, பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
எதிர்பார்ப்பு
வழக்கமாக, மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், தேர்தல் காரணமாக முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுகிறது. முற்பகல் 11 மணி அளவில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தேர்தல் காரணமாக இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் இணை செயலாளர் திருவாரூர் வெ.சத்ய நாராயணன் கூறியதாவது:-
வேளாண் விளை பொருள்களுக்கான கொள்முதல் விலையினை அதிகரித்துத் தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. அதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசா யிகளுக்கு ஊக்கத்தொகையை அறிவிக்க வேண்டும். உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு ஆலை உரிமையாளர்கள் குறைந்தபட்ச ஆதார விலை தருவதில்லை. இதில், விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில், வேளாண இயந்திரங்கள், கருவிகள், மற்றும் மின்வேலிகளை வழங்க வேண்டும். சோலார் பம்பு செட்டுகளுக்கான மானியத்தை உயர்த்த வேண்டும். கோமாரி நோயால் இறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய சிறு தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தலைவர் கனகாம்பரம், செயலாளர் கண்ணன் ஆகியோர் கூறுகையில், ‘‘அரசு நிறுவும் தொழிற் பேட்டைகளில் மனைகளின் விலை அதிகமாக உள்ளது. அதை குறைக்க வேண்டும். சிறுதொழில் நிறுவனங்கள், கடன் தொகை நிலுவையை 3 மாதங்களில் செலுத்தாதபோது, அவற்றை வங்கிகள் (சர்பாசி சட்டம்) மூடுவதால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கின்றனர். இதில், தமிழக அரசு தலையிட்டு உதவ வேண்டும்’’ என்றனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்
இதேபோல் அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்கின்றனர். புதிய ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். கட்டமைப்பு திட்டங்களை அறிவிக்கும் வேகத்தில், செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர்.
இதுபோல், வணிகர்கள், வரி விலக்கு உச்சவரம்பினை உயர்த்தக் கேட்டுக் கொண்டுள்ளனர்.