காந்தியை இழிவுபடுத்திய பாஜகவை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவைத் தலைவருமான குமரி அனந்தன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தைத் தொடங்கி வைத்து குமரி அனந்தன் பேசும் போது, “காந்தியின் பெருமையை இந்திய அரசால் பாதுகாக்க முடியவில்லை. உலக நாடுகளில் காந்தி வாழ்கிறார். 120 நாடுகளில் காந்தியின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. 80 நாடுகள் காந்தியின் சிலையை நிறுவியுள்ளன. உலகமே போற்றும் காந்தியை மத்திய பாஜக அரசு மதிக்காமல் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றார். அதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், காந்தி பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாலை 5 மணிக்கு உண்ணா விரதத்தை முடித்துவைத்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் பேசும்போது, “மத்திய கதர் கிராம கைத்தொழில் ஆணையம் புத்தாண்டில் வெளி யிடும் நாட்காட்டிகளில் இதுவரை காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படத்துடன் வெளியிட்டு வந்தது. ஆனால், இந்தாண்டுக் கான நாட்காட்டிகளில் காந்தி படத்துக்குப் பதிலாக பிரதமர் மோடியின் படம் வைத் துள்ளது. இதற்கு நாட்டு மக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித் துள்ளனர்.
இந்நிலையில், பணத்தாள் களில் இருந்தும் காந்தியின் படத்தை எடுக்க வேண்டும் என்று பாஜக ஆளும் அரியாணா மாநில அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். ஒரு நிறுவனம் காந்தி படத்தின் மீது கால்படும்படி மிதியடிகளை தயாரித்து விற்பனை செய்திருக்கிறது. இத்தகைய அவமதிப்பு நடவடிக்கைகளை பாஜக தலைமை கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.